சிங்கப்பூருக்குக் குழந்தைகளைக் கடத்திய இந்தோனீசியக் கும்பல் சிறையில் அடைப்பு

சிங்கப்பூருக்குக் குழந்தைகளைக் கடத்திய இந்தோனீசியக் கும்பல் சிறையில் அடைப்பு

2 mins read
690db0af-1fb1-45ef-8b2d-3b88ecc52be6
குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

ஜகார்த்தா: கைக்குழந்தைகளைக் கடத்தி, சிங்கப்பூர் உட்பட பல இடங்களுக்கு விற்பனை செய்த இந்தோனீசியக் கடத்தல் கும்பலின் ‘மூளை’யாகச் செயல்பட்ட 70 வயது லை சியூ லூவானுக்கு ஆள் கடத்தல் குற்றத்தின்கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஜாவாவில் உள்ள பண்டோங் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தீர்ப்பை அளித்தது. குழந்தைகளைக் கடத்துதல், போலித் தத்தெடுப்பு ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் குழந்தைகளை வெளிநாடுகளுக்குக் கடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிபதி காதோட் அர்டியான் அகஸ்தியோனோ தலைமையிலான நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.

2023 முதல் 2025 வரை குறைந்தது 34 குழந்தைகளைக் கடத்தியதாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட 19 பேரில் லூவானும் ஒருவர். இதில் 12 குழந்தைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒரு குழந்தை 200 மில்லியன் முதல் 250 மில்லியன் ரூப்பியா வரையிலான தொகையில் விற்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

லூவானைத் தவிர்த்து, இக்குற்றத்தில் தொடர்புடைய எஞ்சிய 18 பேரையும் நீதிமன்றம் குற்றவாளிகளாக உறுதி செய்தது. கும்பல்களில் சேர ஆள்களைச் சேர்த்த மூவருக்கும் போலி ஆவணங்களைத் தயாரித்த ஒருவருக்கும் தலா ஆறாண்டுகள், ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தைகளைப் பராமரித்து வந்த எஞ்சிய 14 பேருக்கு மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெற்றோர் தங்களின் விருப்பத்தின் பேரிலேயே குழந்தைகளைக் கொடுத்ததாகவும் எந்தக் குழந்தையும் கடத்தப்படவோ சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவோ இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்