செமாராங்: இந்தோனீசியாவின் இலவசச் சத்துணவுத் திட்டத்தின்கீழ் உணவருந்தியோரில் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை ஏறத்தாழ 2,000 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்படைந்துள்ளனர்.
உணவு சுகாதாரமிக்க முறையில் தயாரிக்கப்படும் என்று இந்தோனீசிய அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. ஆனால், அதுகுறித்துத் தற்போது பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
யாரும் நச்சுணவால் நோய்வாய்ப்படக்கூடாது என்ற இலக்கை இலவசச் சத்துணவுத் திட்டம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக அண்மையில் ஜாம்பியில் கிட்டத்தட்ட 145 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர்.
பாலர் பள்ளி மாணவர்கள் முதல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை நோய்வாய்ப்பட்டனர்.
இலவசச் சத்துணவுத் திட்டத்தின்கீழ் உள்ளூர்ச் சத்துணவு நிறைவேற்றச் சேவைப் பிரிவு தயாரித்து விநியோகித்த உணவை அந்த மாணவர்கள் சாப்பிட்டதை அடுத்துக் கடுமையாக அவதியுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஏறத்தாழ 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) நிலவரப்படி இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 29ஆம் தேதியன்று மேற்கு மங்கராய் பகுதியில் ஏறத்தாழ 134 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர்.
அரசாங்கம் வழங்கிய காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.
காய்கறிகளிலிருந்து ஒருவித துர்வாடை வீசியதாகவும் அவை பார்ப்பதற்கு கெட்டுப்போனவைபோலத் தெரிந்ததாகவும் மாணவர்கள் சிலர் கூறினர்.
ஜனவரி 28ஆம் தேதியன்று குடுஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஏறத்தாழ 540 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைசுற்றல் ஆகியவை ஏற்பட்டன. இலவசச் சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.
46 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தோனீசிய அரசாங்கத்தின் இலவசச் சத்துணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டது குறித்து அந்நாட்டின் தேசியச் சத்துணவு அமைப்பின் தலைவர் டாடான் ஹின்டாயானா வருத்தம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதுவரை ஊட்டச்சத்து நிறைவேற்றச் சேவைப் பிரிவுடன் தொடர்புடைய உணவு தயாரித்தல், விநியோகம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் திரு டாடா ஹின்டாயானா தெரிவித்தார்.

