வெளிநாட்டு உதவியைத் தட்டிக்கழித்த இந்தோனீசியா

சுமத்ராவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அவதியுறுகின்றனர்

வெளிநாட்டு உதவியைத் தட்டிக்கழித்த இந்தோனீசியா

2 mins read
f1dad81b-bc5f-4979-933c-bfadf5ae0562
சுமத்ரா வெள்ள நிலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று இந்தோனீசிய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

மேடான்: சுமத்ராவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் நெருக்கடி நிலையை இந்தோனீசிய மத்திய அரசாங்கம் அறிவிக்க மறுத்தது மக்களின் சினத்தைத் தூண்டியுள்ளது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததால் அனைத்துலக நிவாரண உதவிகளைச் சுமத்ராவால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாக அளவில் மீட்புப் பணியின் சுமை அதிகரித்துள்ள நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் வட்டாரத் தலைவர்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்கின்றனர்.

சுமத்ராவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததால் வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை வட்டாரத் தலைவர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி வடக்கு சுமத்ராவில் உள்ள மேடான் நகராட்சி 30 டன் கிலோகிராம் அரிசியையும் 300 பொட்டலங்களில் வந்த பிள்ளைகளுக்கான பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள், வழிபாட்டுப் பொருள்கள் ஆகியவற்றையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் திருப்பி அனுப்பியது.

மத்திய அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின் பெயரில் திருப்பி அனுப்பியதாக நகராட்சி சொன்னது.

சுமத்ரா வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்தன.
சுமத்ரா வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்தன. - படம்: ஏஎஃப்பி
இந்தோனீசியா வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள்.
இந்தோனீசியா வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள். - படம்: ஏஎஃப்பி

இந்தோனீசியாவின் ‌‌ஷைமா அல்ஹெப்சியில் உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுத் தூதரகம் மூலம் இம்மாதம் 13ஆம் தேதி அந்த நிவாரணப் பொருள்கள் மேடான் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்காப்பு அமைச்சு, தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு ஆகியவற்றுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு நிவாரணப் பொருள்களைத் திரும்ப கொடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மேடான் மேயர் சொன்னார்.

ஆனால் நிவாரணப் பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கக்கூடாது என்றும் வெளிநாட்டு உதவிகளைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் மக்கள் குறைகூறினர்.

அது உள்ளூர்வாசிகளின் சினத்தையும் தூண்டியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைவான உதவியுடன் தவித்துவரும் வேளையில் அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்தது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் சாடினர்.

குறிப்புச் சொற்கள்