இந்தோனீசிய வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது: மீட்புப் பணியாளர்கள்

1 mins read
d33b0e64-34d9-4ae2-aa9a-c2d9a79ccbb5
சுமத்ராவைப் பாதித்த பேரிடர்களில் அண்மைப் பருவமழையும் ஒன்று. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 1,003 பேர் மாண்டதாக மீட்புப் பணியாளர்கள் சனிக்கிழமை (டிசம்பர் 13) கூறியுள்ளனர்.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் அந்நாடு சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்தோனீசியாவின் வடமேற்குத் தீவான சுமத்ராவில், கடந்த இரண்டு வாரமாகப் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பேரிடரில் 5,400க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பு தெரிவித்தது.

சுமத்ராவைப் பாதித்த பேரிடர்களில் அண்மைப் பருவமழையும் ஒன்று.

மாண்டோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இன்னும் 218 பேரைக் காணவில்லை என்று பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.

பெருவெள்ளத்தால் ஏறக்குறைய 1.2 மில்லியன் குடியிருப்பாளர்கள், தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் விரக்தி அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் மெதுவாய் நடைபெறுவதாக அவர்கள் புகார் கூறினர்.

இந்நிலையில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, சுமத்ராவின் வடக்கே உள்ள லங்காட் நகருக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். நிலைமை மேம்பட்டுள்ளதாக அவர் கூறினார். வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருந்த சில பகுதிகளை இப்போது அணுகமுடிவதாக அவர் சொன்னார்.

“இங்கும் அங்குமாக சில இடங்களில் மீட்புப் பணிகள், இயற்கையாலும் சுற்றுச்சூழலாலும் தாமதமடைந்துள்ளன. தற்காலிகத் தங்கும் இடங்கள் நன்றாக இருக்கின்றன. சேவைகளும் உணவு விநியோகமும் போதிய அளவுக்கு உள்ளன,” என்றார் திரு பிரபோவோ.

பேரிடர் ஏற்படுத்திய சேதத்தைச் சரிசெய்யவும் நகரங்களை மறுநிர்மாணிக்கவும் S$4 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்