இந்தோனீசியா வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையைப் பரிசீலிக்கக்கூடும்: பிரபோவோ

இந்தோனீசியா வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையைப் பரிசீலிக்கக்கூடும்: பிரபோவோ

2 mins read
dcef745b-70df-408d-b38a-5cc000b368c7
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியா, உற்பத்தித்திறனை மேம்படுத்த வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடும்.

உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்துவரும் நிலையில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் முன்னெச்சரிக்கையாக அத்தகைய ஏற்பாடு குறித்து ஜகார்த்தா ஆலோசித்து வருகிறது.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது நடப்பிலிருந்த நடவடிக்கைகளை ஏற்கெனவே சில நாடுகள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டதாக அதிபர் பிரபோவோ சொன்னார். வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையும் அவற்றுள் ஒன்று.

உற்பத்தித்திறனைப் பெருக்க அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்குத் திரு பிரபோவோ உத்தரவிட்டுள்ளார்.

“வரும் நாள்களில் நாங்கள் அதனை மறுஆய்வு செய்வோம். சேமிப்பதற்கு நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் நாம் மிகவும் வலுவுடன் திகழ்வோம். ஆனாலும் பயன்பாட்டைக் குறைப்பதும் முக்கியம்,” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் நடப்பவற்றை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிப்பது முக்கியம் என்று திரு பிரபோவோ வலியுறுத்தினார். இந்தோனீசியாவின் அடிப்படை உணவு விநியோகம் சீராக உள்ளது; ஆயினும், எரிபொருள் விலைகள் கூடினால் அவை உணவுப்பொருள்களின் விலைகளையும் பாதிக்கக்கூடும் என்றார் திரு பிரபோவோ.

நிதி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகரிப்பதை அரசாங்கத்தால் தவிர்க்க முடியும் என்று இந்தோனீசிய அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இயன்றவரை பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். வரவுசெலவுத் திட்டத்தில் சமநிலையை எட்டுவதே இலக்கு. அதை எங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் அவர்.

எரிபொருள் இருப்பை வலுப்படுத்துவதற்குரிய திட்டங்களை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக அளவில் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் திரு பிரபோவோ கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்