ஜகார்த்தா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதிக் குழுவில் நிரந்தர உறுப்பினராகச் சேர்வதற்கான ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ($1.28 பில்லியன்) இந்தோனீசியா செலுத்தாது என அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுவில் இணைந்ததற்காக உள்நாட்டில் கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட நிலையில், தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தோனீசிய அதிபர் அலுவலக யூடியூப் ஒளிவழியில் மார்ச் 22ஆம் தேதி வெளியான அறிக்கையில், டிரம்ப்பின் அமைதிக் குழுவிற்கு அமைதிப்படை வீரர்களை அனுப்ப மட்டுமே இந்தோனீசியா ஒப்புக்கொண்டுள்ளதாகத் திரு பிரபோவோ தெரிவித்தார்.
காஸாவில் ஈராண்டுகளாக நீடித்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவர கத்தார், எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து டிரம்ப் நிர்வாகம் கடந்த அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக அமைதிக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.
இந்த நிபந்தனை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அமைதிக் குழுவில் சேர்ந்ததற்கும் காஸாவிற்கு 8,000 அமைதிப்படை வீரர்களை அனுப்ப உறுதியளித்ததற்கும் இந்தோனீசியாவின் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகளை அதிபர் எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதிக் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் இந்தோனீசிய அதிபர் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், பாலஸ்தீனர்களுக்கு அது பயனளிக்கவில்லை என்றாலோ அல்லது இந்தோனீசியாவின் தேசிய நலன்களுக்கு முரணாக இருந்தாலோ, அதிலிருந்து விலகிவிடுவேன் என அவர் பின்னர் தெரிவித்தார்.
இந்நிலையில், “அமைதிக் குழுவில் நாங்கள் ஒருபோதும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க விரும்பியதில்லை. அதுபோன்ற எவ்வித நிதி சார்ந்த வாக்குறுதிகளையும் தாம் அளிக்கவில்லை,” என மார்ச் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திரு பிரபோவோ தெளிவுபடுத்தினார்.

