ஜகார்த்தா: சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்காக 122 பேரைச் சட்டவிரோதமாக கம்போடியாவிற்குக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை இந்தோனீசிய அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவர். இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்தோனீசிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 மில்லியன் ரூப்பியா (S$53,000) வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
சமூக ஊடகம் மூலம் இந்தோனீசியா முழுவதிலுமிருந்து ஆள்களைத் தேர்வுசெய்து, அவர்களை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கம்போடியாவிற்குக் கடத்தியதாக அந்த 12 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஜகார்த்தா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஹெங்கி ஹரியாடி தெரிவித்தார்.
பணத்தேவைக்காகத் தான் தங்களின் உறுப்புகளை விற்க அந்த 122 பேரும் ஒப்புக்கொண்டனர் என்றும் அவர்களில் பெரும்பாலோர் பெருந்தொற்றின்போது தங்களின் வேலையை இழந்தவர்கள் என்றும் திரு ஹரியாடி தெரிவித்தார்.
உறுப்பு தானம் செய்வதற்காக அவர்களுக்குத் தலா 135 மில்லியன் ரூப்பியா தருவதாகக் கடத்தல்காரர்கள் உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

