சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற பேருந்தில் தீ; சென்னைப் பயணி உடல் கருகி மரணம்

சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற பேருந்தில் தீ; சென்னைப் பயணி உடல் கருகி மரணம்

1 mins read
d729638f-cd28-4359-9b8a-d8240cf73767
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பேருந்து. தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புப் படையினர். - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

மலாக்கா: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், சுற்றுப்பயணிகளுக்கான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் உடல் கருகி மாண்டார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு நிகழ்ந்தது.

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் 28 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதை அடுத்து, பேருந்து தீப்பிடித்துக்கொண்டதாக மலேசியக் காவல்துறை கூறியது.

கொழுந்துவிட்டு எரிந்த பேருந்தைவிட்டு வெளியே வர முடியாமல் 17 வயது யஃபாரா தாஜ் ஃபக்ருதீன் ஹுசைனி மாட்டிக்கொண்டதாகவும் மிகக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் மாண்டதாகவும் அலோர் கஜா காவல்துறை கண்காணிப்பாளர் அர்ஷத் அபு தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த 49 வயது அனிசா பேகம் ஃபக்ருதீன் உசைனிக்கும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 69 வயது பீர் முகம்மது கன்னுதீனுக்கும் மிக மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

விபத்துக்குள்ளான 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி, காயங்கள் இன்றி தப்பியதாகக் காவல்துறை கூறியது.

மாண்டவரும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவுச்சாலையில் உள்ள ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளோட்டி தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் அந்த மோட்டார் சைக்கிள் மீது அப்பேருந்து மோதித் தீப்பிடித்துக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அலோர் கஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா