உலகப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்த ‘ஐஎம்எஃப்’

உலகப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்த ‘ஐஎம்எஃப்’

2 mins read
ஈரான் போர் மோசமடைந்தால் உலகப் பொருளியல் சுருங்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
9d486712-7524-49a9-8d40-442041b6d2c8
அனைத்துலகப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியலாளர் பியேர் ஒலிவியே கொரிஞ்சாஸ். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) உலகப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) குறைத்தது.

மத்திய கிழக்குப் பூசலால் எரிசக்தி விலை அதிகரிப்பதே அதற்குக் காரணம். அதோடு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் பயணங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து வளர்ச்சி நிலவரம் மேலும் மோசமடையக்கூடும் என்றும் நிதியம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் 12ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்று.
ஏப்ரல் 12ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்று. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஐஎம்எஃப், உலக வங்கிச் சந்திப்புகளுக்காக அதிகாரிகள் அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் கூடினர். அப்போது உலகப் பொருளியல் நிலவரத்துக்கான மூன்று சூழ்நிலைகளை ஐஎம்எஃப் முன்வைத்தது. அதன்படி, போர் இனி எப்படிப் போகும் என்பதைப் பொறுத்து உலகப் பொருளியல் வலுவிழந்திருக்கும், மேலும் மோசமடையும் அல்லது மிகவும் மோசமாகும் என்று நிதியம் எச்சரித்தது.

மூன்று வகையான சூழல்கள்

நிலவரம் ஆக மோசமானதாக உருவெடுத்தால், உலகப் பொருளியல் சுருங்கும் விளிம்பிற்குச் செல்லும் என்பது ஐஎம்எஃப்பின் கணிப்பு. அந்த வகையில், ஒரு பீப்பாய் எண்ணெய்யின் சராசரி விலை இவ்வாண்டு 110 டாலராகவும் (139 வெள்ளி) அடுத்த ஆண்டு 125 டாலராகவும் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நிலைமை அஞ்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதிருந்தால் போர் அதிக காலம் நீடிக்காமல் இருக்கும்; இவ்வாண்டு பிற்பாதியில் எண்ணெய் விலை இயல்புநிலைக்குத் திரும்பும். அந்த வகையில், இவ்வாண்டு ஒரு பீப்பாய் அளவு எண்ணெய்யின் சராசரி விலை 82 டாலராக இருக்கும். அது, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலையான 96 டாலருக்குக் கணிசமான அளவு குறைவானதாகும்.

எனினும், முன்னுரைப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, போர் எப்போது முடியும் என்பது தெளிவாகத் தெரியாமல் இருக்கும் வேளையிலும் எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறுகள் இருந்துவரும் நிலையிலும் நிலவரம் மோசமடையும் வாய்ப்புகள்தான் அதிகம் இருப்பதுபோல் தெரிவதாக ஐஎம்எஃப் தலைமைப் பொருளியலாளர் பியேர் ஒலிவியே கொரிஞ்சாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிலைமை மிக மோசமாக இல்லாமல் ஓரளவு சமாளிக்கக்கூடிய வகையில் இருந்தால் இவ்வாண்டு ஒரு பீப்பாய் அளவு எண்ணெய்யின் விலை சுமார் 100 டாலராகவும் அடுத்த ஆண்டு சுமார் 75 டாலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்