சட்டவிரோதத் தங்க உற்பத்தி: இந்தோனீசியாவில் $1.87 பி. கள்ளப்பண விசாரணை

சட்டவிரோதத் தங்க உற்பத்தி: இந்தோனீசியாவில் $1.87 பி. கள்ளப்பண விசாரணை

2 mins read
bf2b2830-fb28-459e-845e-200139f386da
தங்கக் கட்டி ஒன்று. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: மேற்கு களிமந்தான் மாநிலத்தில் சட்டவிரோதத் தங்க உற்பத்தி (gold mining) நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்கும் செயல்கள் குறித்து இந்தோனீசியக் காவல்துறையினர் பெரிய அளவில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

25 டிரில்லியன் ருப்பியா (1.87 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான, கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையின் ஓர் அங்கமாக இந்தோனீசியக் காவல் படையின் சிறப்புக் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 19) கிழக்கு ஜாவாவில் மூன்று இடங்களில் திட்டமிட்டுச் சோதனை நடத்தினர்.

சுரபாயா, காங்ஜுக் ஆகிய பகுதிகளில் இரு வீடுகள், ஒரு நகைக்கடை ஆகியவற்றைக் குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டதாகக் காவல் படை சிறப்புக் குற்றவியல் பிரிவுத் தலைவர் அடே சாஃப்ரி சிமான்ஜுன்டாக் தெரிவித்தார். சட்டவிரோதத் தங்க வர்த்தகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் சொத்துகளை அடையாளம் காண்பது இந்நடவடிக்கையின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், மின்சாரப் பொருள்கள், ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரமாக இருக்கக்கூடிய பல்வேறு பொருள்களை, விசாரணை நடத்தும் அதிகாரிகள் அந்த மூன்று இடங்களில் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்தனர். அப்பொருள்களுக்கும், சட்டவிரோதமாகத் தங்கம் உற்பத்தி செய்து, அதைச் சேகரித்து விற்கும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது,” என்று பிரிகேடியர்-ஜெனரல் அடே வியாழக்கிழமை குறிப்பிட்டார்.

மேற்கு களிமந்தானில் 2019லிருந்து 2022ஆம் ஆண்டு வரை செயல்பட்ட சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தை நடத்தி வந்தோருக்கு நீதிமன்றம் ஒன்று தண்டனை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக பிரிகேடியர்-ஜெனரல் அடே தெரிவித்தார். அந்தச் சுரங்கத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர்.

இவ்வழக்கில் பலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், பிரிகேடியர்-ஜெனரல் அடே மேல்விவரங்கள் ஏதும் வழங்கவில்லை.

அதிகாரிகள் இதுவரை 37 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், சந்தேக நபர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்