உடன்படவில்லை எனில் ஈரானை ஒரே இரவில் முடித்துவிடுவேன்: டிரம்ப்

உடன்படவில்லை எனில் ஈரானை ஒரே இரவில் முடித்துவிடுவேன்: டிரம்ப்

2 mins read
136ccd38-37f7-4e80-b687-328d19a9b7a8
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: புளூம்பெர்க்

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டத் தவறினால் ஒரே இரவில் ஈரானை ஒழித்துக்கட்டிவிடப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய மிரட்டலை விடுத்துள்ளார்.

“ஒட்டுமொத்த ஈரானும் ஒரே இரவில் வீழ்த்தப்படும். அந்த இரவு நாளைய இரவாகக்கூட இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 ரக விமானத்திலிருந்து இரு அமெரிக்க வீரர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்தார்.

வளைகுடா வழியாகத் தடையற்ற எரிசக்திப் போக்குவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஓர் ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ உடன்பாட்டிற்கு அவர் விதித்த காலக்கெடு, வாஷிங்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) இரவு 8 மணியுடன் முடிவடைகிறது.

இதுகுறித்து திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், ஈரானில் உள்ள ‘நியாயமான தலைவர்கள்’ நன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்குவார்கள் என்று தாம் கருதுவதாகவும் ஆயினும் முடிவு என்பது நிச்சயமின்றி உள்ளது என்றும் கூறினார்.

இதற்கிடையே, தற்காலிகச் சண்டை நிறுத்த யோசனையை ஈரான் நிராகரித்துவிட்டது. அதற்குப் பதிலாக, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஈரான் மீதான பொருளியல் தடைகளை அகற்றவும் அது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

மத்திய கிழக்குப் போரில் இதுவரை அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதன் மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்கப் படையினர் எவரும் போர்க்கைதியாக ஈரானிடம் பிடிபடவில்லை.

முன்னதாக, சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 10 மணிக்குள் போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டிற்கு ஈரான் இணங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்