சவூதிமீது ஹூதி தாக்குதல்; பொதுமக்களில் 11 பேர் காயம்

சவூதிமீது ஹூதி தாக்குதல்; பொதுமக்களில் 11 பேர் காயம்

2 mins read
e616bfd0-d5ea-4187-b1ed-96ba8b0f3984
ஹூதியுடன் ஈரானிய ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

ரியாத்: சவூதி அரேபியாமீது ஏமனின் ஹூதி அமைப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சவூதியைச் சேர்ந்த எழுவர், ஏமனைச் சேர்ந்த ஒருவர், எகிப்தியர்கள் இருவர், பாகிஸ்தானியர் ஒருவர் காயமுற்றதாக மேஜர் ஜெனரல் துர்க்கி அல் மாலிக்கி தெரிவித்தார்.

துர்க்கி அல் மாலிக்கி, சவூதி அரேபியாவின் தலைமையிலான ராணுவக் கூட்டமைப்பின் பேச்சாளராவார்.

அந்தக் கூட்டணி, அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்படும் ஏமன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பாகும்.

தாக்குதலில் காயமடைந்தோரில் நான்கு வயதுக் குழந்தையும் அடங்குவார். அந்தக் குழந்தைக்கு இரண்டாம் நிலைத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹூதி அனைத்துலகச் சட்டத்தை மீறும் வகையில் பொதுமக்கள் இருக்கும் இடங்கள்மீது தாக்குதல் நடத்தியதாக மாலிக்கி குற்றஞ்சாட்டினார். பொதுமக்களைப் பாதுகாக்கத் தங்கள் ராணுவக் கூட்டமைப்பு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டமைப்பின் கருத்து குறித்து ஆகக் கடைசி நிலவரப்படி ஹூதி அமைப்போ ஈரானோ உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

சவூதி அரேபியா எதிர்கொள்ளும் சிக்கல்

ஐந்து மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் போர், தற்காப்பு தொடர்பில் சவூதி அரேபியாவின் கணிப்புகளைச் சிக்கலாக்கியுள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகச் சவூதிக்கும் ஹூதிக்கும் இடையே தொடரும் பூசல், ஈரான் போருடன் அதிகம் தொடர்புடையதாக உருவெடுத்துவருகிறது.

செங்கடலில் ஹூதி அமைப்பு செயல்படுத்தியுள்ள போக்குவரத்துத் தடுப்புகளால் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதியில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பூசல், வட்டார அளவில் மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்சவூதி அரேபியாஹூதிதாக்குதல்ஈரான்ஈராக்