ஏமனில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஹூதிப் படையினர் மத்திய கிழக்குப் போரில் நுழைந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக திங்கட்கிழமை (மார்ச் 30) எண்ணெய் விலைகள் மூன்று விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தன.
போர் வட்டாரத்தில் அமெரிக்கா அதிகமான படையினரைக் குவித்து வருவதால் எழுந்துள்ள அச்சமும் எரிசக்திச் சந்தையில் எதிரொலித்தது.
அதன் காரணமாக, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை US$116.43க்கு உயர்ந்தது. கடந்த வாரத்தின் கடைசி வேலை நாளான மார்ச் 27ஆம் தேதி 4.2 விழுக்காடு அதிகரித்த பின்னர் திங்கட்கிழமையும் அதன் ஏற்றம் தொடர்ந்தது.
போர் தொடங்கிய பின்னர், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலைகள், சாதனை அளவாக 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துவிட்டன.
ஜூன் மாதம் வரை போர் நீடித்தால் எண்ணெய் விலை US$200ஐ தொடும் சாத்தியம் இருப்பதாக மெக்வாரி குழுமம் தெரிவித்துள்ளது.
தென்பகுதி செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்திருப்பதாக ஹூதிப் படையினர் தெரிவித்தபோதிலும் அவர்கள் நினைத்தால் அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தலாம். அந்த அளவுக்கு ஹூதிப் படையினரிடம் பலம் உள்ளது.
போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சவூதிப் பேரரசு எண்ணெய் ஏற்றுமதிக் கப்பல்களுக்குப் பயன்படுத்தும் சவூதி அரேபியத் துறைமுகமான யான்புவும் ஹூதிப் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகும் தூரத்தில்தான் உள்ளது.
ஆட்டம் கண்ட ஆசியப் பங்குச் சந்தைகள்
இந்நிலையில், வளைகுடா மோதல் காரணமாக முதலீட்டாளர்கள் பின்வாங்கியதால் திங்கட்கிழமை (மார்ச் 30) ஆசியப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு திங்கட்கிழமை மதிய வேளை வர்த்தகத்தின்போது 0.02 விழுக்காடு குறைந்திருந்தது.
ஜப்பானின் நிக்கேய் குறியீடு 3.2 விழுக்காடு சரிவு கண்டது. மார்ச் மாதத்தில் மட்டும் அது 13 விழுக்காடு வீழ்ந்துள்ளது. தென்கொரியாவின் கோஸ்பி குறியீடும் 2.75 விழுக்காடு சரிந்தது. அதேபோல ஹாங்காங்கின் ஹாங்சென் குறியீடும் 0.9 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

