சிட்னி: நியூசிலாந்தின் தெற்குத் தீவில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. அதனால், சாலைகளும் மேம்பாலங்களும் மூடப்பட்டன.
கடந்த வார இறுதியில், தலைநகர் வெலிங்டனைக் கடும்புயல் உலுக்கியதில் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. தற்போது புயல் தெற்கு நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆறுகளில் நீர்மட்டம் மளமளவென அதிகரிக்கக்கூடும் என்றும் நியூசிலாந்தின் வானிலை ஆய்வகம் எச்சரித்தது. அதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
பேரலைகளையும் ஆபத்தான கடற்சூழலையும் எதிர்பார்க்கலாம் என்றும் அது கூறியது.
நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறைஸ்ட்சர்ச்சுக்கு அருகே கரையோரத் தீபகற்பத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, மரங்கள் சாய்ந்தன. நிலச்சரிவுகளால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மோசமான வானிலை தொடர்வதால் தண்ணீரைச் சேமித்துவைக்கும்படி குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் தண்ணீரைக் கொதிக்கவைத்து அருந்துமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

