வெறுப்புப் பேச்சு; மலேசியாவில் உள்ள ரோஹிங்யா பள்ளிகள் மூடப்படுகின்றன

வெறுப்புப் பேச்சு; மலேசியாவில் உள்ள ரோஹிங்யா பள்ளிகள் மூடப்படுகின்றன

2 mins read
1a295432-f916-4ff8-9cb1-afd1786e40cb
மலேசியாவின் சுபாங் ஜெயாவில் வலுக்கட்டாயமாக மூடப்பட்ட ரோஹிங்யா அகதிகளுக்கான பள்ளியில் உள்ள காலியான வகுப்பறை. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் 12 வயது ரோஹிங்யா முஸ்லிம் அகதியான நூர், கடந்த ஜூன் மாதம்முதல் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

வகுப்பறைக்குச் செல்லும் வழியில் ஆடவர்கள் இருவர் அந்தச் சிறுமியை அடித்துத் துன்புறுத்தப்போவதாக மிரட்டியதே அதற்குக் காரணம்.

“நீ ஏன் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறாய்? எங்கள் நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறாயா?,” என்று அவர்கள் கேட்டதாக நூர் தெரிவித்தார். விளைவுகளுக்குப் பயந்து அவரது குடும்பத்தினர் நூரின் முழுப் பெயரையும் குறிப்பிட மறுத்துவிட்டனர்.

மலேசியா முழுவதும் அகதிகளுக்கான பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமான இதுபோன்ற தொல்லைகளையும் மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் ரோஹிங்யா குழந்தைகள் பலரில் நூரும் ஒருவர் என்று மனித உரிமை அமைப்புகளும் கல்வியாளர்களும் கூறுகின்றனர்.

“குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறவே அஞ்சுகின்றனர்,” என்று மலேசியாவில் வளர்ந்த ரோஹிங்யா சமூக ஆர்வலரான ஷரீஃபா ஷகீரா கூறினார்.

“நீங்கள் ஒரு குழந்தைக்கு ஓரிரு நாள்கள் மட்டுமே தொல்லை கொடுப்பதில்லை; மாறாக, அவர்கள் மனத்தில் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய பெரும் துயரத்தை உருவாக்குகிறீர்கள்,” என்றார் அவர்.

ரோஹிங்யா சமூகத்தினரைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்பட்ட வெறுப்புப் பேச்சுகளும் தவறான தகவல்களும் அச்சமூகத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்ததோடு, தொழில்நுட்ப ஒழுங்குமுறை தொடர்பான கவலைகளையும் எழுப்பின.

அதன் விளைவாக, நாடு முழுவதும் குறைந்தது ஒன்பது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பள்ளிகள் மூடப்பட்டது குறித்தோ வெறுப்புப் பேச்சு குறித்தோ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சு பதிலளிக்கவில்லை.

கிட்டத்தட்ட 120,000 ரோஹிங்யா சமூகத்தினர் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பில் பதிவு செய்துள்ளபோதிலும், மலேசியா அவர்களை அகதிகளாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை; மாறாக, அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்