உலகளாவிய எண்ணெய் விலை ஏற்றம் மலேசியாவையும் பாதித்துள்ளது: அன்வார்

ரோன்95 பெட்ரோலின் சலுகை விலை தொடரும்

உலகளாவிய எண்ணெய் விலை ஏற்றம் மலேசியாவையும் பாதித்துள்ளது: அன்வார்

2 mins read
f1534df8-3330-42eb-8e0d-853b15afd75d
மலேசியாவின் எண்ணெய் இறக்குமதி, அதன் ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.  - படம்: பிரதமர் அலுவலகம், மலேசியா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: உலக அளவில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கமாக இருப்பது மலேசியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

நாடு, எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையிலும் பாதிப்பு உண்டாகியிருப்பதாக அவர் சொன்னார். மலேசியாவின் எண்ணெய் இறக்குமதி, அதன் ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

மத்திய கிழக்குப் பூசலால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து கேள்விகள் எழுந்ததாகத் திரு அன்வார் சொன்னார். ஈரான்மீது கடந்த மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்தன.

மத்திய கிழக்குப் பூசலால் உலகின் முக்கிய எண்ணெய்ப் பாதையான ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் பதிவில் மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.

“ஹோர்முஸ் நீரிணைக்கு இடையூறு ஏற்படும்போது உலகில் எண்ணெய் விநியோகம் குறைகிறது; விலைகள் உயர்கின்றன. அதனால் மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது,” என்றார் அவர்.

“மலேசியா, எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இருந்தும் நாங்கள் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி செய்வது அதிகம்,” என்று திரு அன்வார் கூறினார்.

நாட்டுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசாங்கத் தள்ளுபடிகள் ஒரே வாரத்திற்குள் 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகரிக்கப்பட்டதை அவர் சுட்டினார்.

பொதுமக்களும் பெரும்பாலான நிறுவனங்களும் சந்தை விலையைக் கொடுக்க அவசியமில்லை என்றார் திரு அன்வார். புடி மடானி ரோன்95, புடி டீசல் வழியாகத் தள்ளுபடிகள் வழங்கப்படுவதாய் அவர் சொன்னார்.

“நிச்சயமற்ற உலகச் சூழலில், மடானி அரசாங்கம் மக்களின் நல்வாழ்வையும் நலத்தையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது,” என்றார் மலேசியப் பிரதமர்.

முன்னதாக, மலேசியாவில் ரோன்95 பெட்ரோலின் சலுகை விலை தொடர்ந்து லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக இருக்கும் என்று திரு அன்வார் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஎண்ணெய்விலைநீரிணைஅமெரிக்காஇஸ்ரேல்ஈரான் போர்