பொதுத்தேர்தல் இப்போது தேவையில்லை, பொருளியல் வளர்ச்சியே அவசியம்: அன்வார்

பொதுத்தேர்தல் இப்போது தேவையில்லை, பொருளியல் வளர்ச்சியே அவசியம்: அன்வார்

2 mins read
50adbe76-103b-4adc-a736-358642dc790e
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவையில்லை, பொருளியலில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் நிராகரித்ததோடு, தமது அரசாங்கத்திற்கு அதன் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

தேசிய முன்னணி தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றியது.

கடந்த 2025ஆம் ஆண்டு சாபா மாநிலத் தேர்தலில் ஒரு இடத்தை மட்டுமே பெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஜோகூர் தேர்தல் தோல்வி அடுத்தகட்டப் பின்னடைவாக அமைந்துள்ளது.

தேசிய முன்னணிக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டதால் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பிரதமர் அன்வார் அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தலை அறிவிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 2028 பிப்ரவரி வரை உள்ளது.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் தேசிய முன்னணிக் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு, அன்வார் தலைமையிலான அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து ஆளும் கூட்டணியின் முக்கிய அங்கமான ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) அதன் தேசிய மாநாட்டில் முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

மலாக்கா கூட்டணியில் பிளவு

இதற்கிடையே, மலாக்கா மாநில அரசுக்கான ஆதரவை பக்கத்தான் ஹரப்பான் மீட்டுக்கொண்டுள்ளது.

மலாக்கா சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய இடங்களை உருவாக்குவது தொடர்பான மசோதாவுக்கு பக்கத்தான் ஹரப்பான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அக்கூட்டணியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டனர். மாநில நிர்வாகப் பதவிகளில் இருந்த நால்வர் பதவி விலகியுள்ளனர். ஜூலை 15 முதல் பக்கத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சியாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணிக் கூட்டணியுடன் கூட்டணி இருக்காது என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மலாக்கா பிரிவுத் தலைவர் கூ போய் தியோங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஆளும் மத்திய அரசுக் கூட்டணியில் உள்ள தேசிய முன்னணியும் பக்கத்தான் ஹரப்பானும் தனித்துப் போட்டியிட்டதால் விரிசல் அதிகரித்த நிலையில், இந்த விலகல் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார்தேசிய முன்னணிபொதுத் தேர்தல்