மத்திய கிழக்கு மோதலால் விமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.
அத்துடன், அந்நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் கூடுதல் எரிபொருளை எடுத்துச் செல்கின்றன. அவசரத் தேவைக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும் இடங்களை அவை கூடுதலாகச் சேர்த்து வருகின்றன.
எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்துத் துறை தற்போது விநியோகச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கிட்டத்தட்ட 21 விழுக்காட்டு எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதனால், ஆசிய நாடுகள் பின்பற்றும் நடவடிக்கைகளை ஐரோப்பிய விமான நிறுவனங்களும் கடைப்பிடித்து வருவதாக கடல்துறைத் தரவு நிறுவனமான கிப்ளர் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருள் விலைகள் இரட்டிப்பாகிவிட்டன. அதனால், சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்துவிட்டன.
ஆசிய நாடுகளில் குறைந்த வருவாய் கொண்ட, இறக்குமதியை நம்பியிருக்கும் வியட்னாம், மியன்மார், பாகிஸ்தான் போன்ற சந்தைகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, சீனாவும் தாய்லாந்தும் விமான எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய அதேவேளை தென்கொரியா தனது எரிபொருள் அளவை 2025ஆம் ஆண்டு அளவுக்குக் குறைத்ததாலும் அந்த நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மலேசியாவிலுள்ள மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா-எக்ஸ் வியட்னாமுக்குப் பறக்குமுன்னர் கூடுதல் எரிபொருளைக் கொண்டு செல்லத் தொடங்கி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அது தொடர்பாகக் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 6) செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர்கள் எங்கள் விமானத்திற்கு எரிபொருள் தரமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. எரிபொருள் அளவை அவர்கள் குறைத்திருக்கிறார்கள்,” என்று வியட்னாமைக் குறிப்பிட்டுப் பேசினார் ஏர்ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான போ லிங்கம்.

