வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் உலக எரிசக்திச் சந்தை ஆட்டம் கண்டது.
நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உதவி செய்யும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருக்கும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகியவை தங்களது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணைக்கு அனுப்ப விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளன. இது அதிபர் டிரம்ப்புக்குப் பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
“சில நாடுகள் உதவ முன்வந்துள்ளன, சில பின்வாங்கியுள்ளன. அமெரிக்கா சில நாடுகளுக்குப் பல ஆண்டுகளாக உதவியுள்ளது. ஆனால், இப்போது அவர்கள் துணையாக நிற்கவில்லை,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“எங்களுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்திடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பு விதிமுறையை மீற முடியாது,” என்று ஜெர்மானிய பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்குவது குறித்து ஜெர்மனியுடன் ஆலோசிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர் தாக்குதல்
இந்நிலையில், ஈரான்மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாகத் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு ஈரானின் பல இடங்களில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
ஆயுதக் கிடங்குகள், ஏவுகணை பாய்ச்சும் இடங்கள், அணுவாயுதக் கட்டமைப்புகள் என ஈரானின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை அழித்து அதைப் பலவீனமாக மாற்றவேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கிடையே, தெற்கு லெபனான்மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

