இலங்கையில் டித்வா புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டித்வா புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
ceb1a452-0f7d-410d-a9e3-08e91b8fb38f
தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கும் சாலை. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கொழும்பு: இலங்கையில் ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 193க்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 200 பேரை இன்னும் காணவில்லை.

தலைநகர் கொழும்பின் வட பகுதியில் கிளனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவருவதாகப் பேரிடர் நிர்வாக நிலையம் தெரிவித்தது.

டித்வா புயலால் ஒரு வாரமாக அங்குப் பலத்த மழை பெய்துவருகிறது.

“புயல் இப்போது கடந்துவிட்டாலும் கிளனி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது,” என்று பேரிடர் நிர்வாக நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

புயலின் சீற்றத்தால் ஏற்பட்ட சேதத்தைக் கையாள்வதற்காக அதிபர் அனுர குமார திசநாயக்க, சனிக்கிழமை (நவம்பர் 29) நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அனைத்துலக உதவிக்கும் அவர் அறைகூவல் விடுத்தார்.

இந்தியா உதவிப்பொருள்களையும் மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பிவைத்தது.

ஜப்பான், உடனடித் தேவைகளை மதிப்பிட ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகச் சொன்னது.

தீவு முழுதும் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆயினும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய வட்டாரத்தில் சில சாலைகள் அணுகமுடியாத நிலையில் உள்ளன.

டித்வா புயலால் 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன.

ஏறக்குறைய 122,000 பேர் அரசாங்கத்தின் தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வெள்ளத்தால் இடம்பெயர நேரிட்ட மேலும் 833,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது.

மீட்புப் பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத் தரப்பினருடனும் தொண்டூழியர்களுடனும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி வருகின்றனர்.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் மின்சார விநியோகமும் தண்ணீர் விநியோகமும் தடைபட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்