இலனோய்: சிகாகோ நகரில் சுழற்காற்று எச்சரிக்கையின் காரணமாக விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அங்கு அமெரிக்க அதிகாரிகள் புயற்காற்று குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வட்டாரத்தில் கடுமையான சூறாவளி வீசுகிறது. அங்குள்ள வீடுகளுக்கும் நிறுவனங்களுக்குமான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலைச் சேவை நிலையம், வியாழக்கிழமை (ஜூன் 11) பின்னேரத்தில் சிகாகோ நகரிலும் சுற்றுவட்டாரத்திலும் சுழற்காற்று வீசக்கூடும் என்றும் ஆபத்தான முறையில் குப்பைகள் பறக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அது கேட்டுக்கொண்டது.
அயோவா, இலனோய், மிசோரி, விஸ்கான்சின் முதலிய பகுதிகளில் சுழற்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விஸ்கான்சினிலிருந்து மிசோரி வரை வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஏறக்குறைய 11.5 மில்லியன் பேர் இடியுடன்கூடிய பலத்த ஆலங்கட்டி மழையை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கப் புயல் கணிப்பு நிலையம் தெரிவித்தது.
அவர்கள் ஏற்கெனவே கடுமையான பாதிப்புக்கு ஆளானதாகவும் மேலும் இரண்டு அலைகள் வீசக்கூடும் என்று நம்பப்படுவதாகவும் தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ‘அக்யூவெதர்’ குறிப்பிட்டது.
கடந்த இரண்டு நாள்களில், மத்திய மேற்குப் பகுதி முழுவதும் ஆலங்கட்டி மழை, பலத்த காற்று, சூறாவளி முதலியவை குறித்த முன்னறிவிப்புகளைப் புயல் கணிப்பு நிலையம் வெளியிட்டிருந்தது.
நியூயார்க் நேரப்படி ஜூன் 11ஆம் தேதி மாலை 4.30 மணிவாக்கில், அமெரிக்கா முழுதும் 925 விமானச் சேவைகள் ரத்தாயின. அவற்றில் சிகாகோவின் ஓ’ஹேர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அல்லது அங்குச் சென்றுசேர்ந்த 598 விமானச் சேவைகளும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
புயலின் தாக்கம் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பிலும் எதிரொலித்தது. நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்தின் வழியாகச் செல்லும் மேலும் 99 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இலனோய், அயோவா, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹாயோ, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் 250,000க்கும் அதிகமான வீடுகளிலும் நிறுவனங்களிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் (2025), கடுமையான புயல்காற்றின் காரணமாக, $51 பில்லியன் ($65.54 பில்லியன்) நட்டம் ஏற்பட்டதாகக் காப்புறுதித் தகவல் நிலையத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

