சோல்: தென்கொரிய நகரமான டேஜியோனில் உள்ள கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேர்ந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் 25 பேர் கடுமையாகக் காயமுற்றனர் என்றும் மேலும் 35 பேர் லேசான காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 20) பிற்பகலில் அத்தொழிற்சாலையில் தீ மூண்டதாகக் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதிபர் லீ ஜே மியூங், தீயை அணைக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, உடனடியாக மத்திய பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு முடுக்கிவிடப்பட்டது.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், அவசரகாலப் படையினர் தீயணைப்புப் பணிகளிலும் மீட்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொழிலாளர்களில் ஒருவர், தொழிற்சாலைக் கட்டடத்தின் இரண்டாவது தளத்திலும் மேலும் ஒன்பது பேர் மூன்றாவது தளத்திலும் மாண்டு கிடந்தனர் என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தீ மூண்டபோது அந்த ஆலையில் 170 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆயினும், தீ விரைந்து பரவியதாகவும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.48 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ‘அன்ஜுன் இண்டஸ்ட்ரியல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். அது, ஹியூண்டாய் மோட்டார், கியா கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களைத் தயாரித்து விற்கிறது.
தீ விபத்து குறித்து அன்ஜுன் உடனடியாகக் கருத்து எதையும் வெளியிடவில்லை.

