பேங்காக் மதுபானக் கூடத்தில் தீ; 27 பேர் மரணம்

பேங்காக் மதுபானக் கூடத்தில் தீ; 27 பேர் மரணம்

2 mins read
26acec4a-586c-4cf1-87a4-453da6b5e50b
தீச்சம்பவத்தில் மாண்ட ஒருவரை அவசர மருத்துவ உதவி வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றுகிறார்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள பிரபல மதுபானக் கூடத்தில் மூண்ட தீயில் 27 பேர் மாண்டனர்.

அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல்லும் அதிகாரிகளும் திங்கட்கிழமை (ஜூலை 13) அந்தத் தகவலை உறுதிசெய்தனர். அண்மை ஆண்டுகளில் சுற்றுலா நடுவமான தாய்லாந்தை உலுக்கிய ஆக மோசமான தீச்சம்பவங்களில் இதுவும் ஒன்று.

“27 உடல்களை மீட்டுள்ளோம், மற்றவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்,” என்று பிரதமர் அனுட்டின் கூறினார். சம்பவ இடத்தை ஞாணிற்றுக்கிழமை நள்ளிரவுவாக்கில் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மரணமடைந்தோரில் 18 பேர் பெண்கள். சோய் லாட் பிராவ் 1 ரோட்டுக்கு அருகே மூண்ட தீயைக் கிட்டத்தட்ட அரை மணிநேரத்தில் தீயணைப்பாளர்கள் அணைத்தனர். மதுபானக் கூடத்துடன் கூடிய உணவகத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யப்பட்டன. பின்னர் உணவக வாயிற்கதவுக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவத்தில் மேலும் 63 பேர் காயமுற்றனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாய் இருப்பதாக நகரின் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிப்புன்ட் சொன்னார். பாதிக்கப்பட்டோரில் பலர் சுற்றுப்பயணிகள் என்றும் கூறப்பட்டது.

பேங்காக்கில் சுறுசுறுப்பாக இயங்கும் வடபகுதியில், தீமூண்ட மதுபானக்கூடம் அமைந்துள்ளது. நகர ரயில் கட்டமைப்புகளால் இணைக்கப்பட்ட பகுதி அது. மதுபானக்கூடத்திற்கு அருகில் இரண்டு கடைத்தொகுதிகள் உள்ளன. அதற்குப் பக்கத்தில் திரையரங்குகளும் பெரிய பூங்காக்களும் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக உள்ள சட்டுச்சாக் வார இறுதிச் சந்தையும் இருக்கின்றன.

கூரைப்பகுதியில் பொருத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றால் தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

தீ முதலில் மதுபானக்கூடத்தின் மேடைக்கு முன்பகுதியில் தொடங்கியதாகவும் பின்னர் அது வேகமாய்ப் பரவியதாகவும் சம்பவத்தில் தப்பித்தவர்கள் கூறினர். அதனால் பலர் மதுபானக்கூடத்தின் பின்புறம் ஓடியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அங்குச் சமையலறையும் குளியலறைகளும் இருந்தன.

“இரண்டு வெளிவழிகள் உள்ளன. ஒன்று சமையலறைக்கு அருகில் இருக்கிறது. வழியில் மதுபான போத்தல்கள் நிரம்பிய பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன,” என்று ஆளுநர் கூறினார். மற்றொரு வெளிவழிக்கு அருகே மேசையொன்று இருந்ததாகவும் அவர் சொன்னார்.

““இதன் பின்னணியை இன்னும் உன்னிப்பாக ஆராயத் தடயவியல் புலனாய்வாளர்களின் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்,” என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துமதுக்கூடம்உணவகம்தீஉயிரிழப்புகாயம்