நோன்பு துறக்கும் முஸ்லிம் வாடிக்கையாளர்கள், ஃபேர்பிரைஸின் 60 கிளைகளில் தின்பண்டப் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
புனித ரமலான் மாதம் முழுவதும் இந்தப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படும்.
நீரும் பழமும் பிஸ்கட்டும் அடங்கிய அந்தத் தின்பண்டப் பொட்டலங்களைப் பேரங்காடி ஊழியர்களும் தொண்டூழியர்களும் நோன்புத் துறப்புக்கு 30 நிமிடங்கள் முன்னதாகவும், 30 நிமிடங்களுக்குப் பிறகும் வழங்குவர்.
எடுத்துக்காட்டாக, ஆப்பிள், பேரீச்சம்பழம் அல்லது பிஸ்கட்டை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கலாம். குடிப்பதற்கு ‘லைச்சி ரோஸ்’ பானம், தேநீர், பால் அல்லது தண்ணீர் வழங்கப்படும். இந்த ஆண்டு 80,000 நோன்புத் துறப்புத் தின்பண்டப் பொட்டலங்களை விநியோகிப்பதாக ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின்போது வழங்கப்பட்ட 75,000 பொட்டலங்களைக் காட்டிலும் அதிகம்.
இந்தத் திட்டம் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை இடம்பெறும் என்று ஃபேர்பிரைஸ் கூறியது. முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலான தெரிவுகளை வழங்க இந்த நடவடிக்கை முற்படுவதாக ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
பேரங்காடியின் அறச்செயல்களுக்கான பிரிவான ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் (FairPrice Foundation), 500 சிறப்புப் பொட்டலங்களை விநியோகம் செய்கிறது.
அந்தப் பொட்டலங்களில் பழங்கள், பேரீச்சம்பழங்கள், பால், சமையல் மசாலா, காலை உணவுப் பொருள்கள் போன்றவை இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 25ஆம் தேதி வரை நோன்புப் பெருநாள் கொண்டாட்டப் பொருள்களுக்கு ஃபேர்பிரைஸ் தள்ளுபடி வழங்கவுள்ளது.
தீவு முழுவதிலும் 35 ஃபேர்பிரைஸ் கடைகளில் சிறப்புச் சந்தைகளும் இடம்பெறும். அதில் பண்டிகைக்கால உணவு வகைகள், சுவையூட்டிகள், உறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவை விற்கப்படும்.

