வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிப்பு: பாத்தாம் குடிநுழைவுத்துறை விசாரணை

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிப்பு: பாத்தாம் குடிநுழைவுத்துறை விசாரணை

2 mins read
df8758fb-cb6b-41c9-aef0-6ffb0e95a0d7
குடிநுழைவு அதிகாரிகள் ஏறத்தாழ $250 வரை லஞ்சமாகப் பெற்று, பணம் பறிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பாத்தாம் குடிநுழைவுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாத்தாம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் இந்தோனீசியாவின் பாத்தாம் நகருக்குள் நுழைவதற்கு, அங்கிருந்த குடிநுழைவு அதிகாரிகள் ஏறத்தாழ $250 வரை லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பாத்தாம் குடிநுழைவுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“தகவல் அளித்தமைக்கு நன்றி. ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று பாத்தாம் குடிநுழைவு அலுவலகத்தின் தகவல், தொடர்புப் பிரிவுத் தலைவர் திரு கரிஷ்மா ருக்மனா மார்ச் 26ஆம் தேதியன்று ஜகார்த்தா போஸ்ட் செய்தித்தாளுக்கு அளித்த எழுத்துபூர்வ அறிக்கை மூலம் தெரிவித்தார். மேலும், தற்போது இது குறித்து உயர்மட்டக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் அதிகாரிகள் தவறு செய்தது உறுதியானால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாத்தாம் குடிநுழைவு அலுவலகத் தலைவர் திரு ஹஜர் அஸ்வத் உறுதி அளித்தார். லஞ்ச, ஊழலுக்கு தங்கள் அலுவலகத்தில் இடமில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

இருப்பினும், எத்தனை அதிகாரிகள் விசாரிக்கப்படுகிறார்கள் அல்லது கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இந்த முறைகேடு குறித்த புகாரை சிங்கப்பூரின் ‘மதர்ஷிப்’ செய்தித் தளம் மார்ச் 25ஆம் தேதியன்று முதலில் வெளியிட்டது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் மார்ச் 13ஆம் தேதியன்று இன்னொருவருடன் பாத்தாம் சென்றார். குடிநுழைவு வரிசையைத் தாண்டவில்லை என்றாலும், அதிகாரி ஒருவர் விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“அந்த அதிகாரி எங்களைப் பார்த்துச் சத்தமிட்டார். எங்களுடைய கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தார். மேலும் ஒவ்வொருவரிடமிருந்து $100 அபராதம் கேட்டார்,” என்று அவர் கூறினார். இரண்டு மணி நேரத் தவிப்பிற்குப் பிறகு, பணத்தை அவர் வேறு வழியின்றி செலுத்தியுள்ளார். அந்த அதிகாரி பணத்தைத் தட்டச்சுப் பலகைக்கு அடியில் மறைத்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாத்தாம் குடிநுழைவு அலுவலகம் இதுபோன்ற விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க அதிகாரபூர்வ வழிகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பின்வரும் முகவரிகளில் புகார் அளிக்கலாம். pengaduankanimbatam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி, +628117002019 எனும் வாட்ஸ்அப் எண், @imigrasibatam எனும் இன்ஸ்டகிராம் பக்கம் ஆகியவற்றின் மூலம் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்