120 மீட்டர் ஆழக் குகைக்குள் சிக்கிய ஆய்வாளர் உயிருடன் மீட்பு

120 மீட்டர் ஆழக் குகைக்குள் சிக்கிய ஆய்வாளர் உயிருடன் மீட்பு

1 mins read
5e691bc1-8008-4317-841b-42080de06b9a
மீட்புப் பணி இரவு முழுவதும் நடந்தது. - படம்: ஆல்ப்ஸ் மலை, குகை ஆய்வியல் மீட்புக் குழு
Google News Preferred Icon

மிலான்: வடமேற்கு இத்தாலியில் உள்ள குகை ஒன்றில் கிட்டத்தட்ட 120 மீட்டர் (394 அடி) ஆழத்தில் பாறை இடுக்கில் கால் சிக்கித் தவித்த குகை ஆய்வாளர் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் 12 மணி நேரமாகப் போராடி உயிருடன் மீட்டனர்.

அவரை மீட்கும் பணியில் 53 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டதாக அவசரகாலச் சேவைப் பிரிவு திங்கட்கிழமை (ஜூன் 1) தெரிவித்தது.

டூரின் நகருக்குத் தெற்கே ஏறக்குறைய 120 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குனியோ மாநிலத்தில் ‘பறக்கும் காட்டுப்பன்றிகளின் குகை’ அமைந்துள்ளது.

இத்தாலியின் முதன்மையான ஆராய்ச்சிப் பகுதிகளில் ஒன்றான அக்குகையில் சிக்கிக்கொண்ட அந்த ஆய்வாளரை மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் இடம்பெற்றன.

குகைக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அந்த ஆய்வாளருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் குகைக்கு வெளியே கொண்டுவரப்பட்டு அவசர மருத்துவ வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்டவர் இத்தாலியர் என்றும் அவருக்கு வயது 20 என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது உடல்நிலை சீராக இருந்ததால் அவரைத் தூக்குப் படுக்கை மூலம் வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மருத்துவக் குழுவினர் கூறினர். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்