வாஷிங்டன்: ஈரானுடனான அமைதி உடன்பாட்டை அமெரிக்கா ‘இன்னும் எட்டவில்லை’ என்றாலும், இருதரப்பும் அதை நெருங்கியுள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் தெரிவித்தார். அதே வேளையில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பேரளவில் முடக்கும் நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பு, யுரேனியச் செறிவூட்டல் விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் இன்னும் சில முரண்பாடுகள் நீடித்து வருவதாக வியாழக்கிழமை (மே 28) செய்தியாளர்களிடம் திரு வேன்ஸ் கூறினார்.
“அமெரிக்க அதிபர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திடுவார், அல்லது அது சாத்தியமா என்பதை இப்போதே துல்லியமாகக் கூறுவது கடினம். ஒப்பந்தத்தின் சில குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பாக நாங்கள் இன்னும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று திரு வேன்ஸ் கூறினார்.
முன்னதாக, போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு சுமுக உடன்பாட்டை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இதற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இறுதி ஒப்புதல் தேவைப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி நன்கறிந்த நான்கு முக்கிய வட்டாரங்களின்படி, இந்தப் புதிய உடன்பாடு தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கும்.
இதனால், ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற கடினமான விவகாரங்களைப் பேச்சுவார்த்தையாளர்கள் கையாண்டுவரும் வேளையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் தொடர வழிவகை ஏற்படும்.
அமெரிக்க, ஈரானியத் தலைவர்களால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதை நோக்கி எடுத்துவைக்கப்படும் ஆகப்பெரிய படியாக இது அமையும்.
தொடர்புடைய செய்திகள்
போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை நெருங்கியதாக இதற்கு முன்னரும் டிரம்ப் நிர்வாகம் பலமுறை கூறியிருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஈரான் அதை மறுத்தோ அதன் முக்கியத்துவத்தைக் குறைத்தோ மதிப்பிட்டு வந்தது.

