மலேசியாவில் ‘இவி’ மின்னூட்டுக் கட்டணம்; சேவை வழங்குவோரிடம் பொறுப்பு ஒப்படைப்பு

மலேசியாவில் ‘இவி’ மின்னூட்டுக் கட்டணம்; சேவை வழங்குவோரிடம் பொறுப்பு ஒப்படைப்பு

1 mins read
2582344a-0c72-4c3a-8d33-a5dcd48c3767
மலேசியாவில் மின்னூட்டப்படும் வாகனம். - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் மின்சார வாகனங்களுக்கு (இவி) மின்னூட்டும் சேவைகளுக்கான கட்டணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, மின்னூட்டுச் சாதனங்களை நடத்தும் நிறுவனங்கள் கட்டணங்களைத் தீர்மானிக்கின்றன. தனியார் துறையில் முதலீடுகளையும் மின்சார வாகன மின்னூட்டுச் சேவைகளை வழங்குவதில் நல்ல போட்டித்தன்மையையும் ஊக்குவிக்க அவ்வாறு செய்யப்படுவதாக மலேசிய முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

“இதன் மூலம் நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள மின்சார வாகன மின்னூட்டு வசதிகள் விரிவுபடுத்தப்படுவது துரிதப்படுத்தப்படும்,” என்று அமைச்சு, நாடாளுமன்ற இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.

செனட்டர் ராபர்ட் லாவ் ஹுய் இயூ கேட்ட கேள்விக்கு அமைச்சு அறிக்கை மூலம் பதிலளித்தது. எத்தனை மின்சார வாகன மின்னூட்டு இயந்திரங்கள் இருக்கின்றன, அவற்றை நடத்தும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டணங்கள் விதிமுறைக் கட்டமைப்பின்கீழ் வருகின்றனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாண்டு மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 6,416 மின்சார வாகன மின்னூட்டுச் சாதனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவற்றில் 6,176 சாதனங்கள் மலேசிய தீபகற்பத்தில் இருப்பதாகவும் 208 சரவாக்கிலும் 32 சாபாவிலும் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாமின்சார கார்மின்னூட்டம்சேவைகட்டணம்அரசாங்கம்