கிறிஸ்துமஸ் காலத்தில் மலேசிய நெடுஞ்சாலைகளில் 2.6 மில்லியன் வாகனங்கள் செல்லும் என எதிர்பார்ப்பு

கிறிஸ்துமஸ் காலத்தில் மலேசிய நெடுஞ்சாலைகளில் 2.6 மில்லியன் வாகனங்கள் செல்லும் என எதிர்பார்ப்பு

1 mins read
6a8f2849-ea39-44b6-9bba-4904a7f211ed
‘பிளஸ்’ நெடுஞ்சாலைகளை மட்டும் ஏறத்தாழ 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) முதல், போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் காலத்தின்போது உச்ச நேரத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏறக்குறைய 2.6 மில்லியன் வாகனங்கள் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய ஆணையம், வாகனவோட்டிகள் அதற்குத் தகுந்தாற்போல் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தியது.

‘பிளஸ்’ நெடுஞ்சாலைகளை மட்டும் ஏறத்தாழ 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவித்தது.

மேலும், ‘பிளஸ்’ நெடுஞ்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட 30 இடங்களில் அறிவார்ந்த தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதிகமான வாகனங்கள் எதிர்பார்க்கப்படுவதால், நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் முறை சுமுகமாக இருப்பதை உறுதிசெய்யுமாறு இதை நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இருப்பதைக் கட்டிக்காக்கும்படியும் நிறுவனங்களுக்கு அது நினைவூட்டியது.

வாகனவோட்டிகள் பயணங்களைத் தொடங்குவதற்குமுன், தங்கள் வாகனங்கள் சீரான நிலையில் உள்ளதை உறுதிசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்துடன், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்குத் தங்கள் கட்டண அட்டைகளில் போதுமான தொகை இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளுமாறு நினைவூட்டப்படுகின்றனர்.

மழை பெய்தால் மோட்டார்சைக்கிள் ஒதுங்குவதற்காக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 571 ஒதுங்கிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
நெடுஞ்சாலைவாகனம்மலேசியாகிறிஸ்துமஸ்