நெகிரி செம்பிலானில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்; எட்டு கட்சிகள் மோதல்

நெகிரி செம்பிலானில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்; எட்டு கட்சிகள் மோதல்

2 mins read
f43e863f-62dd-453c-b6b9-41950611cf87
நெகிரி செம்பிலானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

சிரம்பான்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜூலை 18) தேர்தல் நடைமுறை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

அம்மாநிலத்தில் உள்ள எட்டு வேட்புமனு தாக்கல் நிலையங்களில் காலை 9 மணி முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பின்னர், தகுதி பெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை ஆணையம் வெளியிட்டது. அதோடு 14 நாள் தேர்தல் பிரசாரமும் முறைப்படி தொடங்கியது.

மொத்தம் எட்டுக் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆக அதிகமாக 36 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிடியின் தேசிய முன்னணி கூட்டணி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் 11 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டாலும் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.

பெர்சத்து மலேசியா 24 தொகுதிகளில் களம் காண்கிறது.

பெரும்பாலான இடங்களில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி கூட்டணிகளுக்கு இடையே நேரடி மோதல் ஏற்படுள்ளது.

நிலாய், ஸ்ரீ தஞ்சுங் ஆகிய தொகுதிகளில் 52 ஆண்டுகளில் இல்லாத ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜெராம் பாடாங், ரஹாங் ஆகிய இரு தொகுதிகளில் நான்கு முனைப் போட்டிகளும் 21 தொகுதிகளில் மும்முனைப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 36 தொகுதிகளுக்கு 83 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை 36 தொகுதிகளில் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் உட்பட கடந்த இரண்டு தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி முழுமூச்சுடன் நெகிரி செம்பிலானில் தேர்தல் களம் காண்கிறது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர் தேர்தலில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 48 இடங்களை தேசிய முன்னணி கைப்பற்றியது. இது 2023 தேர்தலைவிட எட்டு இடங்கள் அதிகம். அதே நேரத்தில் பக்கத்தான் ஹரப்பானின் பலம் 12லிருந்து எட்டாகக் குறைந்தது.

தேர்தல் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய நெகிரி செம்பிலானில் 4,800 அதிகாரிகளும் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் துணையாக புக்கிட் அமானிலிருந்து 1,373 காவலர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அதையடுத்து, முன்கூட்டியே வாக்களிப்பதற்கான தேதி ஜூலை 28 என்றும் வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1 என்றும் அறிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் தேர்தலில் மொத்தம் 889,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 867,151 பொது வாக்காளர்களும் 16,884 ராணுவ வீரர்கள், அவர்களின் துணைவர்களும், 5,455 காவல்துறை அதிகாரிகள், அவர்களின் துணைவர்களும் அடங்குவர்.

இந்தத் தேர்தலில் மலேசிய ஒராங் அஸ்லி கட்சி (அஸ்லி), மலேசிய சோசலிச கட்சி, மலேசிய இஸ்லாமிய முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்