‘இஃபிஷரி’ இழப்பு; ஓய்வூதிய நிதி நிறுவனத்தைத் தற்காத்துப் பேசினார் அன்வார்

‘இஃபிஷரி’ இழப்பு; ஓய்வூதிய நிதி நிறுவனத்தைத் தற்காத்துப் பேசினார் அன்வார்

2 mins read
b8c5562c-a344-436f-8d3d-4b213382678c
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இந்தோனீசியாவின் ‘இஃபிஷரி’ மீன்வளர்ப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓய்வூதிய நிதி நிறுவனம் (கேடபிள்யூஏபி) செய்த முதலீட்டை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தற்காத்துப் பேசியுள்ளார்.

அந்த இழப்பை, அந்த நிதியத்தின் ஒட்டுமொத்த வலுவான செயல்திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், எதிர்கால முதலீடுகள் மேலும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சருமான திரு அன்வார், ‘இஃபிஷரி’ நிறுவனத்தில் ஓய்வூதிய நிதி நிறுவனம் செய்த 163.4 மில்லியன் ரிங்கிட் முதலீடு, நிபுணத்துவ நிதி மேலாளர்கள் சம்பந்தப்பட்ட தீவிரமான முதலீட்டுச் செயல்முறைகளுக்குப் பிறகே செய்யப்பட்டது என்றார். அரசியல் தலையீடு எதுவுமின்றி, முதலீட்டு நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனிநபர் முதலீட்டு முடிவுகள் நிபுணர்களால் சுயேட்சையாக எடுக்கப்பட்டவை என்றும் அதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் தேவையில்லை என்றும் திரு அன்வார் வலியுறுத்தினார்.

இந்தோனீசியாவின் ‘இஃபிஷரி’ நிறுவனத்தில் ஓய்வூதிய நிதி நிறுவனம் செய்த முதலீட்டைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பொதுப் பணம் சம்பந்தப்பட்டதால், இந்த முதலீட்டை நான் அறிவிக்க முடிவெடுத்தேன்,” என்று கூறினார்.

தற்போது, அந்நிறுவனம் அதன் நிர்வாகத்தின் தொடர்பில் மோசடி வழக்கில் சிக்கியுள்ளது.

“இதற்குப் பொறுப்பானவர்கள் ஏற்கெனவே சிறையில் உள்ளனர்,” என்று கூறிய திரு அன்வார், அனுபவம் வாய்ந்த உலகளாவிய முதலீட்டாளர்கள்கூட ஏமாற்றப்படலாம் என்பதை இச்சம்பவம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

‘இஃபிஷரி நிறுவனத்தில் ஓய்வூதிய நிதி நிறுவனம் மட்டுமே முதலீடு செய்யவில்லை என்பதைத் திரு அன்வார் சுட்டிக்காட்டினார். ஜப்பானின் ‘சாஃப்ட்பேங்க்’ (SoftBank), ‘செகோயா கேபிட்டல்’ (Sequoia Capital), ‘அகுவா-ஸ்பார்க்’ (Aqua-Spark), அபுதாபியின் ‘42XFund’ போன்ற உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இழப்பை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், ஓய்வூதிய நிதி நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செயல்திறனையும் மதிப்பிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.

“இந்த முதலீட்டில் 160 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், ஓய்வூதிய நிதி நிறுவனம் 12.9 பில்லியன் ரிங்கிட் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது; அதன் நிதி வளர்ச்சியும் 9.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

“இந்த நிறுவனம் இன்னும் கவனமாகச் செயல்பட வேண்டும் என நாம் விரும்பினால், அதன் ஒட்டுமொத்தச் செயல்திறன், செயல்திட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து முழுமையாக மதிப்பிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்