காங்கோவில் இபோலா தொற்று தீவிரமடைகிறது

காங்கோவில் இபோலா தொற்று தீவிரமடைகிறது

2 mins read
404cf201-cabc-40c5-838a-b938b4828d25
கிழக்கு காங்கோவில் ஏற்பட்டுள்ள தொற்றினை எதிர்த்து, மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசிகள் இன்றி போராடி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்டுள்ள இபோலா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள புனியா மாநிலத்துக்கான அனைத்து விமானப் பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கோவையும் கடந்து தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் அருகில் உள்ள வட்டார சுகாதார அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கோவில் உள்ள மூன்று பகுதிகளில் இபோலா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. தொற்றால் பாதிப்படைந்தோரைக் கண்டறியும் முயற்சிகள் கட்டுப்பாட்டுகளையும் மீறி கடந்துவிட்டதால், பலரும் அந்நோய்க்கு ஆளாகும் ஆபத்து நிலவுகிறது.

வெள்ளிக்கிழமை (மே 22) நிலவரப்படி, காங்கோவில் மட்டும் 91 இபோலா நோயாளிகள் உறுதி செய்யப்பட்டனர். மேலும் 867 சந்தேக நபர்களுடன் 204 நோயாளிகள் மரணமடைந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இபோலாவால் பாதிக்கப்பட்ட 1,745 நபர்களில் ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகளுடன் மட்டுமே தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று காங்கோ சுகாதாரத்துறைப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதனை அரசாங்க அதிகாரிகள் அதிர்ச்சியூட்டுவதாகக் குறிப்பிட்டனர்.

அதனால்தான் போக்குவரத்து அமைச்சு அனைத்து வர்த்தக, தனியார், சிறப்பு விமானங்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லத் தற்காலிகத் தடை விதித்தது.

உகாண்டாவுக்கு அருகில் உள்ள இடுரி பகுதி, புனியா மாநிலத்தின் அங்கமாகும். அந்த இடம்தான் தொற்றின் மையமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமான உதவிகளுக்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் மட்டும் விமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

காங்கோவிலும் அண்டை நாடுகளிலும் தற்போது பரவிவரும் இபோலாவின் ‘புந்திபுக்யோ’ (Bundibugyo) கிருமி வகைக்கு அங்கீகரிக்கப்பட்டத் தடுப்பூசிகளோ, மருந்துகளோ இல்லை. எனவே மிகவும் அடிப்படையான மருத்துவச் சிகிச்சை முறைகளை மட்டுமே அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் உதவிக்கரம்

காங்கோவுக்கு உதவும் வகையில் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவசர நிதியுதவியுடன், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருத்துவ உபகரணங்களையும் உதவிக் குழுக்களையும் அது அனுப்பியுள்ளது.

காங்கோ, தென்சூடான், உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்திறங்கும் பயணிகளுக்குக் கட்டாய மேம்பட்ட மருத்துவச் சோதனைகள் விமான நிலையங்களில் நடத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
காங்கோஆப்பிரிக்காதொற்றுநோய்மரணம்சுகாதார அமைச்சுபோக்குவரத்து

தொடர்புடைய செய்திகள்