இபோலா பாதிப்பு: அமெரிக்கர்களை கென்யாவில் தனிமைப்படுத்த திட்டம்

இபோலா பாதிப்பு: அமெரிக்கர்களை கென்யாவில் தனிமைப்படுத்த திட்டம்

2 mins read
83794995-6afa-4e65-a1b4-f37a8fa6af7c
கென்யாவின் லாய்கிபியா விமானப் படைத் தளத்தில் கிருமித் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள, ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாத அமெரிக்கர்களுக்காக சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஆப்பிரிக்க நாடுகளில் இபோலா கிருமி பரவி வரும் சூழலில், அங்கு பாதிப்புக்கு ஆளாகும் அல்லது பாதிக்கப்பட வாய்ப்புள்ள அமெரிக்கக் குடிமக்களை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வராமல், ஆப்பிரிக்க நாடான கென்யாவிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கென்யாவில் ஒரு புதிய தற்காலிக தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘பன்டிபியூஜியோ’ இபோலா கிருமி வேகமாகப் பரவி வருகிறது. 

உலக சுகாதார அமைப்பு  இதனை அனைத்துலகக் கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. காங்கோவில் தற்போது வரை ஏறத்தாழ 1,000 பேருக்கு இபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேளையில், 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபத்தான சூழலில் ஆப்பிரிக்கப் வட்டாரத்தில் பணியாற்றும் அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் அங்குள்ள அமெரிக்கர்கள் இபோலா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களைப் பல மணி நேரம் விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அவர்களுக்கு மிக விரைவாகவும், அருகிலேயேவும் அவசர சிகிச்சை அளிக்க முடியும் என்று அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய கொள்கை மருத்துவ வல்லுநர்கள் முன்னாள் சுகாதார அதிகாரிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு 2014-2015 காலக்கட்டத்தில் ஏற்பட்ட இபோலா பரவலின் போது, பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள அதிநவீன தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் குணப்படுத்தப்பட்டனர். 

ஆனால், தற்போதைய முடிவானது அமெரிக்கக் குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமையிலிருந்து பின்வாங்குவது போல் உள்ளது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்