பெர்லின்: ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை (ஜூலை 25) நடந்த பொது நிகழ்ச்சியில் காரை ஓட்டிவந்து அங்கிருந்த பலரை மோதித் தள்ளிவிட்டு, ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு அத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘டியர்கார்டன்’ பூங்காவில் நடந்த அத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கார் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் ஆயினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் ஜெர்மானியக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்த ஓட்டுநருக்கு இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக நம்புவதாகக் காவல்துறைப் பேச்சாளர் ஃபுளோரியன் நாத் குறிப்பிட்டார்.
தலைமறைவான அந்த ஆடவர் அப்துல் பி. என்ற பெயருடையவர் எனவும் அவர் ஆயுதம் ஏந்தியிருக்ககூடிய பயங்கரமானவர் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருந்துகொள்ளவேண்டும் என்று காவல்துறை எச்சரித்தது.
அவரைப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனே தெரிவிக்கும்படியும் அது கேட்டுக்கொண்டது.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்று ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் நடக்கும் அந்த ‘கிரிஸ்டபர் ஸ்திரீட் டே பரேட்’ எனும் விழாவில் வெள்ளை வேன் ஒன்று கூட்டத்திற்குள் வேகமாகப் புகுந்து பலரை மோதியது.
பின்னர் அப்பகுதியிலிருந்த மரத்தின்மீது மோதி நின்றது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமறைவான சந்தேகப் பேர்வழியைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போருக்கான அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஜெர்மன் தலைநகரைச் சுற்றி வான்வழியாக ஹெலிகாப்டர்களிலும் நிலத்திலும் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


