கோலாலம்பூர்: நோன்பு காலத்தில் உள்ளூர் சந்தைகளில் போதுமான அளவில் கோழியும் முட்டையும் இருப்பில் இருக்கும். அதுகுறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று மலேசியாவின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகம்மது சாபு தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தின் பிற்பாதியில் ரமலான் பண்டிகைக்கான நோன்பு நாள்கள் தொடங்கவுள்ளன.
“வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சின் தரவுகளைக் கொண்டு பார்க்கையில் கோழி, முட்டையின் விநியோகம் நிலையாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது,” என்று திரு சாபு குறிப்பிட்டார்.
“இருப்பினும், உணவுக் கடத்தல் பெரிய பிரச்சினையை உருவாக்கும். அது சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். இந்தக் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்க அனைத்துத் தரப்பினரும் அமைச்சுகளும் ஒன்றிணைந்து கட்டுப்பாடு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்,” என்று அமைச்சர் சாபு கேட்டுக்கொண்டார்.
கோழி இறக்குமதியும் உள்ளூர் உற்பத்தியும் சரியான அளவில் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் கோழிகளைப் போதுமான அளவில் உற்பத்தி செய்ய பண்ணைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவற்றைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் திரு சாபு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கோழி, முட்டை இருப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது திரு சாபு இதைக் கூறினார்.
“சிறிய அளவில் பண்ணைகளை வைத்துள்ளவர்கள் கோழி வளர்ப்பில் அதிகச் செலவுகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கோழித் தீவனங்களின் விலை அதிகமாக உள்ளது. இதைச் சமாளிக்கும் வகையில் தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோழித் தீவனத்திற்கான மாற்று உணவு தயாரிப்பில் உள்ளது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மாற்றுத் தீவனப் பட்டியலில் பனை விதை, உள்ளூரில் வளர்க்கப்படும் மக்காச்சோளம் ஆகியவையும் உள்ளன.
“கிட்டத்தட்ட 15 உள்ளூர் நிறுவனங்கள் மக்காச்சோள சாகுபடித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நிதி மற்றும் தளவாட உதவிககளை வழங்கி வருகிறது,” என்று அமைச்சர் சாபு குறிப்பிட்டார்.

