அனைத்துலக நாடுகள் மீது மீண்டும் 10% வரி: டோனல்ட் டிரம்ப்

நாடுகள் சந்திக்கவுள்ள பொருளியல் நெருக்கடி

அனைத்துலக நாடுகள் மீது மீண்டும் 10% வரி: டோனல்ட் டிரம்ப்

2 mins read
dbe5b0c8-bc91-4ac2-a554-d702f19fa824
அனைத்துலக நாடுகள் மீது 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் அறிவித்த வரி செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்த சில மணி நேரத்திலேயே அனைத்துலக நாடுகள் மீது 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றபோதும், வெள்ளை மாளிகையின் குறிப்பேடு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று சுட்டியது.

மேலும் இந்தக் கூடுதல் வரிகளால் உலக நாடுகள் மீதான பொருளியல் நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்குப் பதிலடி தரும் என்று அனைத்துலக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

வரி விதிப்பு சார்ந்த அம்சங்கள் எல்லாம் நாடாளுமன்றம் கையாள வேண்டிய அம்சம், இதில் அதிபருக்கு அதிகாரம் இல்லை; நாடாளுமன்ற அவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில்தான் தெளிவுப்படுத்தியிருந்தது.

இதற்கிடையே இத்தீர்ப்பு குறித்து வேதனைப்படுவதாக சொன்ன அதிபர் டிரம்ப், அதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அமெரிக்க நீதிபதிகளின் கருத்துகள், அவர்கள் இதனை அணுகிய விதம்  அவர்கள் இதரத் தலையீடுகளால் சூழப்பட்டு பொருத்தமில்லா தீர்ப்பை வழங்க வழிவகுத்தது என்று சாடியிருந்தார் திரு டிரம்ப்.

எனினும் தீர்ப்பு வந்தவுடன் சற்றும் எதிர்பாராத வகையில் உலக நாடுகள் மீது பொருள் சார்ந்த வரியை கூடுதலாகச் சுமத்தியிருக்கிறார் திரு டிரம்ப்.

இதற்கிடையே, அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்சும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று கருத்துரைத்துள்ளார். 

முன்னதாக, ஏற்றுமதியைவிட அமெரிக்காவில் இறக்குமதியின் அளவு அதிகரிப்பதால், நாட்டில் வா்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், இந்த இடைவெளியை சமாளிக்கும் வகையில் வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

எனவே, இதற்கு ஏதுவாக 1977ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அனைத்துலக அவசர பொருளியல் அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.  

எனினும், வணிகத்திலும் பொருளியல் கட்டமைப்பிலும் இந்த வரிவிதிப்புகள் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தொழில்நிறுவனங்கள் அக்கறை தெரிவித்திருந்தன.

மேலும் இதன் எதிரொலியாகவும் பல நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை சிக்கலின்றி தொடரவும் வர்த்தக நிறுவனங்கள், வணிகர்கள், அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் என பலதரப்பினர் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக  வழக்கு தொடுத்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்