கட்டுப்பாடுகளைப் புறக்கணிக்கவில்லை: மலையேற்ற வழிகாட்டி

கட்டுப்பாடுகளைப் புறக்கணிக்கவில்லை: மலையேற்ற வழிகாட்டி

2 mins read
998bf684-849e-432d-8287-6c01ad780a16
எரிமலை அசம்பாவிதத்தில் மாண்ட சிங்கப்பூரர்கள் ஷாஹின் முஹ்ரெஸ் அப்துல் ஹமீது (பின்வரிசை நடுவில்), திமத்தி ஹெங் (பின்வரிசை வலமிருந்து இரண்டாவது). - படம்: தி அவுட்சைட்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் டுக்கோனோ எரிமலைக்கு மலையேறச் சென்றபோது நேரிட்ட அசம்பாவிதத்தில் இரு சிங்கப்பூரர்கள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவத்தில், மலையேற்றத் தடை குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று உள்ளூர் வழிகாட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 8ஆம் தேதியன்று, 19 பேர் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்ற 35 வயது ரெசா செலாங், சிங்கப்பூரர்கள் ஷாஹின் முஹ்ரெஸ் அப்துல் ஹமீது, திமத்தி ஹெங் மற்றும் இந்தோனீசியப் பெண் ஏஞ்சல் கிரிஷேலா பிரடித்தா ஆகியோரின் மரணத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், தாம் எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த எரிமலையில் ஏறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் குறித்து தமக்கு அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மலையேற்றத்தைத் தொடங்குவதற்கு முன்பு, எரிமலையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமுயா கிராமத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவரிடம் கேட்டறிந்ததாகவும் எரிமலைச் சீற்றம் குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை என அவர் உறுதியளித்ததாகவும் திரு ரெசா கூறினார்.

உண்மையில், எரிமலைச் சீற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்றே உள்ளூர் அதிகாரிகள் மலையேற்றத்திற்குத் தடை விதித்திருந்தனர். எரிமலையின் எச்சரிக்கை நிலை இரண்டாம் கட்டத்துக்கு உயர்த்தப்பட்டிருந்ததுடன் அதன் எரிமலை வாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மலையேற்றம் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை குறித்த அறிவிப்பு மாமுயாவிலுள்ள எரிமலை ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு தாம் சென்று பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொண்ட திரு ரெசா, அந்த ஆய்வகம் எரிமலை நிலவரத்தைப் பற்றிய தகவல்களை மட்டுமே வழங்கும் என்றும் மலையேறுபவர்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் வாதிட்டார்.

குறிப்புச் சொற்கள்