கெந்திங் விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது; பயண நிறுவனம் மீது விசாரணை

கெந்திங் விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது; பயண நிறுவனம் மீது விசாரணை

2 mins read
c1f8ce07-2bcf-4d47-b9d8-df9b8932366f
ஓட்டுநருக்கு ஏற்கெனவே 27 அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சிங்கப்பூரர்கள் உட்பட சுற்றுப்பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் மலேசியாவின் கெந்திங் மலையில் ஜூன் 29ஆம் தேதி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் இருவர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, காவல்துறை விசாரணையில் உதவ, சுற்றுலா பேருந்து ஓட்டுநர் நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத் தொடர்பான குற்றச்செயல்களில் பலமுறை ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த 32 வயது ஓட்டுநருக்கு ஏற்கெனவே 27 அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம் இல்லாததும் அதில் அடங்கும்.

ஓட்டுநர் ஜூன் 29ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெந்திங் மலையிலிருந்து கோலாலம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து சறுக்கி, சாலைத் தடுப்பு ஒன்றின் மீது மோதிக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுநர், உதவியாளர், சுற்றுப்பயண வழிகாட்டி ஆகிய மூவரும் மலேசியர்கள் என்றும் பேருந்தில் எஞ்சிய 18 பேரும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் என்றும் அறியப்படுகிறது.

இந்நிலையில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுற்றுப்பயணிகளைச் சந்தித்துப் பேசினார் சுற்றுப்பயண, கலைகள், கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங்.

தங்களின் கெந்திங் மலைப் பயணம் முழுவதும் பிரச்சினைகள் பல எழுந்ததாக அந்தப் பயணிகள் குறிப்பிட்டனர் என்றார் திரு தியோங். மூன்று முறை பேருந்தை மாற்ற வேண்டியிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பயண நிறுவனம் மீதும் விசாரணை நடந்துவருகிறது. விதிமீறல் நிகழ்ந்திருந்தால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

விபத்து தொடர்பான முழு விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்