இடிந்து விழுந்த பனிச்சுவர்; ஒருவர் மரணம், குகைக்குள் சிக்கிய இருவர்

இடிந்து விழுந்த பனிச்சுவர்; ஒருவர் மரணம், குகைக்குள் சிக்கிய இருவர்

2 mins read
e601c38f-868d-4c4a-9484-a488a22b61b8
குறைந்தது 150 பேர் தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் 12 பேரைக் கொண்ட குழுக்களாக அவர்கள் மாறி மாறிச் செயல்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர். - படம்: PEXELS
Google News Preferred Icon

ரெக்யாவிக்: ஐஸ்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளைக் கண்டு ரசிக்க ஆகஸ்ட் 25ஆம் தேதி சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் 25 சுற்றுப்பயணிகள் சென்றிருந்தனர். அப்போது பனிச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பனிக்குகைக்குள் இருவர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மற்ற சுற்றுப்பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் பனிக்குகைக்குள் சிக்கியோரைத் தேடி மீட்கும் பணிகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

கடும் இருளில் தேடுதல், மீட்புப் பணியை நடத்துவது மிகவும் சிரமமானது, ஆபத்தாமனதும்கூட என்று அதிகாரிகள் கூறினர்.

விடிந்ததும் தேடுதல், மீட்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. குறைந்தது 150 பேர் தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் 12 பேரைக் கொண்ட குழுக்களாக அவர்கள் மாறி மாறிச் செயல்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பனிப்பாறைகள் எளிதில் இடிந்து விழக்கூடியவை என்பதால் சம்பவ இடத்துக்கு கனரக இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கைகளால் பயன்படுத்தக்கூடிய கருவிகளைப் பயன்படுத்தி பனித் துண்டுகள் வெட்டப்பட்டு அகற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பனிப்பாறை, பனிக்குகைகளில் சுற்றுலாப் பயணங்களை நடத்த ஐஸ்லாந்தின் தேசிய பூங்காவுடன் சுற்றுப்பயண நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஐஸ்லாந்தின் இணையம் வழி செய்தி நிறுவனமான விசிர் தெரித்துள்ளது.

பனிப்பாறைகளிலும் பனிக்குகைகளிலும் சுற்றுலாப் பயணங்களை நடத்துவதற்கு முன்பு நிலைமை பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆராயும் என்று தேசிய பூங்கா நம்புவதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்