பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் படையினர் இடையே மோதல்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் படையினர் இடையே மோதல்

2 mins read
fc6fead6-5491-472e-8875-95aadfac7267
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருக்கும் ராணுவ வாகனங்கள். - படம்: ஏஎஃப்பி

காபூல்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள படையினர் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) மோதிக்கொண்டனர்.

தலிபான் அமைப்பு பாகிஸ்தான்மீது பதிலடித் தாக்குதல்கள் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அண்மைய சண்டை நடந்துள்ளது.

கடந்த சில நாள்களாக நடத்தப்பட்டுவரும் எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் காரணமாக, அப்பகுதியில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள படையினரைத் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்கினர். அதனைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சண்டை நீடித்தது. அதன் பிறகு, பாகிஸ்தான் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இஸ்லாமாபாத், தலிபான் நிர்வாகங்கள் இரண்டுமே, எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை அழித்துள்ளதாக அல்லது கைப்பற்றியுள்ளதாகக் கூறின. இருப்பினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் அந்தக் கருத்துகளை உறுதிசெய்யமுடியவில்லை.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றில், இரவு நேரத்தில் ராணுவ வாகனங்கள் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அதோடு, துப்பாக்கிச் சூட்டால் திடீர் ஒளி ஏற்படுவதையும் பார்க்கமுடிந்தது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையும் கேட்கமுடிந்தது.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில், ஆப்கானிஸ்தான் படையினர் காரணமின்றி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குப் பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள தகவல் அமைச்சு கூறியது.

பாதுகாப்புப் படையினர் உடனடியான, திறம்பட்ட பதிலடியைக் கொடுத்ததாக அது குறிப்பிட்டது. தனது குடிமக்களைப் பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியது.

இந்த வாரம் நாடு முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்