பெய்ஜிங்: தென் மாநிலமான ஹைனானை புதிய வரியற்ற மண்டலமாகச் சீனா வியாழக்கிழமை (டிசம்பர் 18) நிறுவியது.
பெல்ஜியம் நாட்டின் அளவைக்கொண்ட அத்தீவு, சுங்கச் செயல்பாடுகளுக்காக உருவாக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட $113 பில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருக்கும் ஹைனானை ஹாங்காங் பாணியிலான வரியற்ற வணிக மையமாக மாற்றுவதன் மூலம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் சேவைத் துறைகளிலும் செயல்பட முடியும். சீனப் பெருநிலத்தில் இதற்குக் கட்டுப்பாடு உண்டு. உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றான விரிவான, மேம்பட்ட பசிபிக் பங்காளித்துவத்தில் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership, CPTPP) இணையும் நோக்கில் சீனா தனது தடையற்ற வர்த்தகச் செயல்பாடுகளை அதிகரிக்க முயல்கிறது.
“நாட்டை ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச்செல்லும் முக்கியமான நுழைவாயிலாக ஹைனான் தடையற்ற வர்த்தக துறைமுகத்தை உருவாக்குவதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது,” என்று அந்நாட்டுச் செய்தி நிறுவனமான சின்ஹுவா குறிப்பிட்டது.
சீனாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2025ன் முதல் மூன்று காலாண்டுகளில் 10.4 விழுக்காடு குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாராளமயமாக்கம், ஹைனானில் வெற்றி பெற்றால், சீனாவின் பொருளியலைச் சந்தை சக்திகளுக்கு அதிக அளவில் வெளிப்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் ஊக்கம் பெறலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஹைனானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு $113 பில்லியன் டாலர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் காட்டுகின்றன. உலக வங்கியின் தரவுகளின்படி இது, உலகின் 70வது பெரிய பொருளியலுக்கு ஈடானது. எனினும், ஹாங்காங்கின் $407 பில்லியன் டாலர் பொருளியலைவிட அது பின்தங்கியே உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிபிடிபிபி உறுப்பினர்கள் ஹைனான் திட்டத்தை எத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடும் என்று வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் ஐயமுறுகின்றனர். அப்பங்காளித்துவத்தில் உறுப்பினர் ஆக முழு பொருளியலும் திறந்த பொருளியலாக இருக்க வேண்டும். சீனா இன்னும் அதற்குத் தயாராகவில்லை.

