பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இரண்டு நாள் சீனப் பயணம் வெள்ளிக்கிழமையுடன் (மே 15) நிறைவு பெற்றது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு திரு டிரம்ப் தமது ஏர்ஃபோர்ஸ் விமானத்தில் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் முதல்நாள் சந்தித்தபோது சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், தைவான் குறித்துச் சீனா விடுத்த எச்சரிக்கை முன்னிலை பெற்றது.
அதை முறையாகக் கையாள அமெரிக்கா தவறினால், மிகவும் மோசமான நிலைக்கு இருநாட்டு உறவுகள் சென்றுவிடும் என்று சீன அதிபர் ஸி, அமெரிக்காவுக்கு நினைவூட்டியிருந்தார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வர்த்தக விமானங்களை சீனா வாங்குவது இதுவே முதல் முறையாகும். மேலும், 200 போயிங் ஜெட் விமானங்களையும், அமெரிக்க எண்ணெய் மற்றும் விவசாயப் பொருள்களையும் வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை அன்று ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டி ஒன்றில் திரு டிரம்ப் தெரிவித்தார்.
உள்நாட்டில் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கும் அதிபர் டிரம்ப், அவரின் சீனப் பயணத்தால் பல நேர்மறையான விளைவுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறார்.
தமது சமூக ஊடகப்பதிவில், “சீனாவுடன் அமெரிக்காவின் உறவு முன்னெப்போதையும் விட வலுப்பெற்றுச் சிறப்படையும் என எதிர்பார்க்கலாம்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா சீனாமீது விதித்த வர்த்தகத் தடைகளை நிறுத்தியதைத் தொடர்வதும் அரிய கனிம வளங்களின் விநியோகத்தைச் சீனா உலக அளவில் கட்டுப்படுத்துவதைத் தவிர்ப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய இலக்குகளாக விளங்கின.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அதிபர் டிரம்ப் பெருமிதம்
“வர்த்தகத்தில் நாங்கள் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம், இருநாடுகளுக்கும் அது நன்மையளிக்கும்,” என்று திரு டிரம்ப் பெருமையுடன் கூறினார். ஆனால் சீன அதிபருடன் நடக்கவிருந்த இறுதிக் கூட்டத்துக்கு அவர் தயாராகும் முன்பாக சீன வெளியுறவு அமைச்சு ஈரான் போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டது.
உலகில் மூலப் பொருள்களின் விநியோகத் தொடரைப் பெரிதும் பாதித்துள்ள ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதி உடன்பாடு மலர சீனா முயற்சிகள் மேற்கொள்ளும் எனவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

