ஜப்பானிய நிறுவனங்கள்மீது சீனா நடவடிக்கை: ராணுவத் தொடர்பு இருப்பதாகச் சாடல்

ஜப்பானிய நிறுவனங்கள்மீது சீனா நடவடிக்கை: ராணுவத் தொடர்பு இருப்பதாகச் சாடல்

2 mins read
56be5d86-7f0d-40b9-b7bc-289f6325e5ae
தைவானைச் சீனா தாக்கினால் ஜப்பான் ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கும் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கூறியிருந்தார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் 40 ஜப்பானிய நிறுவனங்கள்மீது சீன வர்த்தக அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடவடிக்கை மேற்கொண்டது. அந்த நிறுவனங்களுக்கு ராணுவத் தொடர்பு இருப்பதாக அது சாடியது.

20 நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மிட்சுபிஷி நிறுவனமும் ஜப்பானிய விண்வெளி அமைப்பும் அடங்கும். அவை, ஜப்பானின் ராணுவத் திறனை மேம்படுத்த உதவியதாகச் சீன வர்த்தக அமைச்சு கூறுகிறது.

சுபாரு உள்ளிட்ட மேலும் 20 ஜப்பானிய நிறுவனங்கள் ‘கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ், அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் இருவகைப் பயன்பாட்டுப் பொருள்களின் ஏற்றுமதி கடுமையாக மறுஆய்வு செய்யப்படும்.

இந்த நடவடிக்கைகள், ஜப்பானின் மறுராணுவமயமாக்கல், அணுவாற்றல் இலக்குகள் ஆகியவற்றைத் தடை செய்யும் நோக்கம் கொண்டவை என்று சீன அமைச்சு கூறியது. மேலும், இந்த நடவடிக்கைகள் சட்டரீதியானவை என்றும் நியாயமானவை என்றும் அது குறிப்பிட்டது.

சீனாவின் சரிபார்ப்பு நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்கள், கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தைவானைச் சீனா தாக்கினால் ஜப்பான் ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கும் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

தேவை ஏற்பட்டால் தைவானை ராணுவ ரீதியான நடவடிக்கை மூலம் தனது கட்டுக்குள் கொண்டுவரப் போவதாகக் கூறும் சீனா, ஜப்பானியப் பிரதமர் இவ்வாறு கூறியதை அடுத்து சீனா ஜப்பான்மீது நெருக்குதலை அதிகரித்து வருகிறது.

ராணுவத்திற்குப் பயன்படக்கூடிய இருவகைப் பயன்பாட்டுப் பொருள்களின் ஏற்றுமதிக்குச் சீனா 2026 ஜனவரியில் விரிவான தடையை அறிவித்தது. அதையடுத்து, அரியவகைக் கனிமவளங்களை ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை அது விதித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்