பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வுடன் செயல்பட்ட அண்டைவீட்டார்

ஒரே தெருவில் இந்தியத் திருமணம், சீன இறுதிச்சடங்கு

2 mins read
2baa0338-d958-41b3-8479-3ebf406421f4
ஒரே தெருவில் எதிர் எதிரே வசிக்கும் இந்திய, சீனக் குடும்பங்கள். - படம்: சைனா பிரஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் நெகரி செம்பிலானில் ஒரே நாளில், ஒரே தெருவில் சீன இறுதிச் சடங்கும் இந்திய திருமணமும் நடந்தன.

அதில், இரு குடும்பங்களும் பரஸ்பர மரியாதையுடன், ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் புரிந்துணர்வோடும் செயல்பட்டது சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

இவ்விரு சடங்குகளும் ஜூலை 5ஆம் தேதி, நெகிரி செம்பிலான், தம்பின்னில் நடந்தேறின.

அவற்றில் ஒன்று, உள்ளூர் ஜனநாயக செயல் கட்சி அரசியல்வாதி ஒருவரின் தாயாரின் இறுதிச் சடங்காகும்.

இறுதிச் சடங்குகள் துக்கமான நிகழ்வு. திருமணத்தின் மகிழ்ச்சியான உணர்வுகள் பெரும்பாலும் இறுதிச் சடங்கின் சோகச் சூழலுக்கு ஏற்றதாக இல்லை என்று நம்பப்படுகிறது.

எனினும், வோங் என்ற குடும்பப் பெயருடைய அந்த அரசியல்வாதி, தனது அண்டை வீட்டுக்காரரின் திருமணம் குறித்து அதிகம் கவலைப்பட்டதாக மலேசிய செய்தி நிறுவனமான சைனா பிரஸ் தெரிவித்தது.

இந்திய குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அவர், 94 வயதில் தனது தாயார் இறந்ததைக் குறிப்பிட்டு, சீன கலாசாரத்தில் “மகிழ்ச்சியான இறுதிச் சடங்கை” கொண்டு வரும் எண் அது என்று ஆறுதல் கூறியுள்ளார்.

அன்று மாலை தமது குடும்பத்தினர் சமயச் சடங்குகள் எதையும் நடத்தத் திட்டமிடவில்லை என்றும் குடும்பத்தினர் திருமணத்தை கொண்டாடலாம் என்றும் வோங் இந்திய குடும்பத்தாரிடம் ஒரு நண்பர் மூலம் தெரிவித்துள்ளார்.

சீனக் குடும்பம் ஆச்சரியப்படும் வகையில், இந்திய குடும்பம் திருமணத்தில் இசையைத் தவிர்த்ததுடன், தங்கள் விருந்தினர்களை இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தங்கள் கார்களை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சீனக் குடும்பத்தினரும் அவர்களது நண்பர்களும் அண்டை வீட்டுக்காரருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

இரு குடும்பங்களின் “பரஸ்பர அனுதாபமும் அக்கறையும்” இணையவாசிகள் பலரையும் நெகிழவைத்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் ஊடகம், அவர்களை “மலேசிய நல்லிணக்கத்தின் சாட்சி” என்று வருணித்துள்ளது

“பரஸ்பர மரியாதை, உதவி, நல்ல அண்டைவீடுகள் இப்படித்தான் இருக்கும்,” என இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“இதுதான் உண்மையான மலேசிய உணர்வு,” என்று மற்றொருவர் கூறினார்.

“இரு குடும்பங்களும் தங்கள் நிகழ்வுகளை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளன,” என்று மற்றொரு பதிவு குறிப்பிட்டது.

சீனக் குடும்பத்தினரின் வீட்டு வாசலில்  விருந்தினர்களுக்காக உணவு மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சீனக் குடும்பத்தினரின் வீட்டு வாசலில் விருந்தினர்களுக்காக உணவு மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன. - படம்: சைனா பிரஸ்
இந்திய குடும்பம், வீட்டு வாசலில் வாழை, தோரணம் கட்டி திருமணத்தைக் கொண்டாடியது.
இந்திய குடும்பம், வீட்டு வாசலில் வாழை, தோரணம் கட்டி திருமணத்தைக் கொண்டாடியது. - படம்: சைனா பிரஸ்
குறிப்புச் சொற்கள்