தைவான் தனி நாடாவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது: சீனா திட்டவட்டம்

தைவான் தனி நாடாவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது: சீனா திட்டவட்டம்

2 mins read
25f7718f-4b7d-4b46-a8ca-6adb398582ce
தைவானிய எதிர்க்கட்சியான ‘கேஎம்டி’யின் தலைவி செங் லி வுன் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: தைவான் தனி நாடாவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தைவான் நீரிணைப் பகுதியில் அமைதியைச் சீர்குலைப்பதற்கு அதுவே முதன்மைக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவுடன் தைவானை இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தைவானின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான குவோமிந்தாங் (கேஎம்டி) கட்சியின் தலைவர் செங் லி வுன் சீனா சென்றுள்ளார்.

தனது ராணுவ நடவடிக்கைகள் மூலமாகத் தைவானுக்குச் சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் தாம் மேற்கொண்டுள்ள ‘அமைதிப் பயணம்’ இது என்று திருவாட்டி செங் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பெருமண்டபத்தில் அதிபர் ஸியைச் சந்தித்தார்.

அப்போது, “நீரிணையின் இருபுறமும் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள்தான். அவர்கள் அமைதி, வளர்ச்சி, பரிமாற்றம், ஒத்துழைப்பு ஆகியவற்றை விரும்பும் ஒரே குடும்பத்தினர்,” என்று திரு ஸி கூறினார்.

அத்துடன், நீரிணைக்கு இருபுறமுள்ள பகுதிகள் ‘ஒரே சீனா’விற்கு உட்பட்டவை என்றும் அவர் சொன்னார்.

“குடும்பம் இணக்கத்துடன் இருந்தால் எல்லாம் செழிக்கும். தைவான் தனி நாடாவதே இப்பகுதியில் அமைதி சீர்குலைவதற்கு முக்கியக் காரணம். அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டோம்,” என்றார் அதிபர் ஸி.

தைவான் அதிபர் லாய் சிங் தே ஒரு ‘பிரிவினைவாதி’ எனக் குறிப்பிட்டு, அவருடன் பேச்சுவார்த்தையைச் சீனா மறுத்து வருகிறது.

தனது மிரட்டல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனச் சீனாவிடம் கூறும்படி லாய் நிர்வாகம், செங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தைவான் அரசாங்கத்துடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இருதரப்பும் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இனிமேலும் சாத்தியமான மோதல்களின் மையப் புள்ளியாக தைவான் நீரிணை இருக்காது என்று திருவாட்டி செங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிய சக்திகள் தலையிடுவதற்கான ஒரு சதுரங்கப் பலகையாகவும் அது இராது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்