மதுபோதையில் கூட்டத்திற்குள் காரை புகுத்திய ஆடவர்; 15 பேர் காயம்

மதுபோதையில் கூட்டத்திற்குள் காரை புகுத்திய ஆடவர்; 15 பேர் காயம்

1 mins read
c97fe784-6e4f-4a76-8721-082a26a4e42c
கூட்டத்திற்குள் கார் புகுந்தது தொடர்பாகச் சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். - படம்: நியூயார்க் டைம்ஸ்
Google News Preferred Icon

நியூ ஐபீரியா: தென்கிழக்கு அமெரிக்க மாகாணமான லூசியானாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்ததில் பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென்று அதிகாரிகள் கூறினர்.

நியூ ஐபீரியாவில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நடைபெற்ற ஒரு சமூக ஊர்வலத்திற்குள் கார் நுழைந்தது. அந்தச சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆடவர், நிதானமின்றி வாகனம் ஓட்டியதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டோட் லேண்ட்ரி, 57, என்னும் அந்த ஆடவர், காயம் ஏற்படும் அளவுக்கு மது அருந்திய மயக்கத்தில் கவனக்குறைவாக வாகனமோட்டியதாகக் குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது வாகனத்தில் திறந்தநிலையில் மதுக்கலன் ஒன்று இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாவோ புத்தாண்டுக் கொண்டாட்டடத்தின் ஒரு பகுதியாக மக்கள் ஊர்வலமாகச் சென்ற வேளையில் அசம்பாவிதம் நடைபெற்றதாக லூசியானா மாநிலக் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

லேண்ட்ரி ஓட்டிய வாகனம் ஏராளமான பாதசாரிகள் மீது மோதியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்