போண்டாய் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலை

போண்டாய் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலை

2 mins read
1a5b72eb-07fe-4c73-af02-7b9249fa51f3
சிட்னி நகரின் போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்குப் பிறகு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி, போண்டாய் பெவிலியன் அருகே காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிட்னி: சிட்னியின் போண்டாய் கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர், திங்கட்கிழமை (பிப்ரவரி 16) முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 14ஆம் தேதி நடந்த அத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்பில் 24 வயது நவீது அக்ரம் மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் 14 கொலைக் குற்றச்சாட்டுகளும், கொலை செய்யும் நோக்கத்துடன் காயம் விளைவித்ததாக 40 குற்றச்சாட்டுகளும் பயங்கரவாதக் குற்றம் தொடர்பான ஒரு குற்றச்சாட்டும் அடங்கும்.

அக்ரமுடன் இணைந்து அவரது தந்தை சஜித், 50, துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சம்பவ இடத்திலேயே சஜித் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

திங்கட்கிழமை சிட்னி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது அக்ரம் காணொளி வாயிலாக முன்னிலையானார்.

அவர் சிட்னி நகருக்குத் தென்மேற்கே அமைந்துள்ள உயர்-பாதுகாப்புச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கைதிகளுக்கான பச்சை நிறை உடையில் காணப்பட்ட அக்ரம், விசாரணைபோது பெரும்பாலும் அமைதியாக இருந்தார். பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடுவதற்கான தடை நீட்டிக்கப்படுவது குறித்த கலந்துரையாடலைச் செவிமடுத்ததை ஒப்புக்கொள்ளும்போது மட்டும்தான் அவர் பேசினார்.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அக்ரமின் வழக்கறிஞர் பென் ஆர்ச்போல்ட், அக்ரம் குற்றத்தை ஒப்புக்கொள்வாரா என்று இப்போது கூறமுடியாது என்றார்.

மேலும், அக்ரம் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலின் விவரங்கள் குறித்துத் தாம் இன்னும் அவரிடம் கலந்துரையாடவில்லை என்று வழக்கறிஞர் ஆர்ச்போல்ட் கூறினார்.

இப்போதுதான் விசாரணை தொடங்கியிருக்கிறது என்பதைச் சுட்டிய அவர், குற்றம் சாட்டப்பட்டதற்கு அடிப்படையான ஆதாரங்கள் உட்பட இதர நடைமுறை குறித்த விவரங்களுக்குக் காத்திருப்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது என்றார்.

சிறைச்சாலைக்குச் சென்று அக்ரமைச் சந்தித்ததாகத் திரு ஆர்ச்போல்ட் கூறினார்.

“தன்னைப் பிரதிநிதிக்க அவருக்கு ஒரு வழக்கறிஞர் தேவை. நமது தனிப்பட்ட கண்ணோட்டம் நம் தொழில்முறைக் கடமைகளுக்குக் குறுக்கே நிற்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து இதற்குமேல் எதுவும் சொல்ல இயலாது,” என்றார் அவர்.

இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்