சிட்னி: சிட்னியின் போண்டாய் கடற்கரையில் நடந்த யூத நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒருவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு உட்பட 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியக் காவல்துறை புதன்கிழமை (டிசம்பர் 17) தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலையில் புகழ்பெற்ற சர்ஃப் கடற்கரையில் ஒரு யூத விழாவில் 50 வயது சஜித் அக்ரமும் அவரது மகன் 24 வயது நவீத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே சஜித் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டிசம்பர் 16 ஆம் தேதி பிற்பகல், நவீத் காவல்துறையினரால் சுடப்பட்ட பின்னர் கோமா நிலையிலிருந்து மீண்டு வந்தார்.
டிசம்பர் 17ஆம் தேதி இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவர்களில் ஒருவரான ரப்பி எலி ஸ்க்லாங்கரின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடினர்.
ஆஸ்திரேலியாவின் போண்டாய் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் நவம்பர் மாதம் இஸ்லாமிய கிளர்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற தெற்கு தீவில் கழித்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 17 அன்று பிலிப்பீன்ஸ், தனது நாடு பயங்கரவாதப் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது.
“பயங்கரவாதப் பயிற்சிக்கு பிலிப்பீன்ஸ் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலை ஆதரிக்க எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை,” என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் கிளேர் காஸ்ட்ரோ தேசிய பாதுகாப்பு மன்ற அறிக்கையிலிருந்து வாசித்தார்.
“போண்டாய் கடற்கரை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பிலிப்பீன்சில் எந்த வகையான பயிற்சியையும் பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவலும் இல்லை,” என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

