உக்ரேனுக்கு $225மி. ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

2 mins read
அதிபர்கள் பைடனும் ஸெலன்ஸ்கியும் பிரான்சில் சந்திப்பு
113a76f1-e4f2-4d5f-8681-1c03bb672727
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடம்), அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் சந்திக்கவுள்ளார்.

‘டி-டே’ வருடாந்தர நிகழ்ச்சிக்கிடையே இரு தலைவர்களும் சந்திப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின்போது உக்ரேனுக்கு அமெரிக்கா $225 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவது குறித்துத் தெரிவிக்கப்படும்.

கடந்த டிசம்பரில் அதிபர் ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்திற்குப் பிறகு இரு அதிபர்களும் நேரடியாகச் சந்தித்துக்கொள்வது இது முதல்முறை.

அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெறவிருக்கும் ஜி-7 உச்சநிலை மாநாட்டின்போதும் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொள்வர்.

இந்த மாநாட்டில், உக்ரேனியப் படையெடுப்புக்குப் பிறகு முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யச் சொத்துகளிலிருந்து $50 பில்லியனை உக்ரேனுக்கு உதவியாக வழங்குவது குறித்துக் கலந்தாலோசிக்கப்படும்.

உதவி குறித்து முடிவெடுக்க மேற்கத்திய நாடுகள் நீண்டகாலம் எடுத்துக்கொள்வதாக அதிபர் ஸெலன்ஸ்கி ராய்ட்டர்சிடம் சென்ற மாதம் கூறியிருந்தார்.

வியாழக்கிழமை (ஜூன் 6) பிரான்சின் நார்மண்டி வட்டாரத்தில் உரையாற்றிய திரு பைடன், இரண்டாம் உலகப் போரின்போது கொடுங்கோலர்களை எதிர்த்து நடந்த போரையும் ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரேனின் போரையும் ஒப்பிட்டுப் பேசினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை ‘சர்வாதிகாரி’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அண்மைய $225 மில்லியன் ராணுவ உதவியில் ராணுவத்திற்கான ஆயுதங்களும் ஆகாயத் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்கும் போர் விமானங்களும் அடங்கும்.

இந்தப் போரின் முடிவை மாற்றியமைக்கக்கூடிய வகையில் உக்ரேனுக்கு அமெரிக்கா இத்தகைய ராணுவ உதவியை வழங்க முயல்வதாகக் கூறிய அமெரிக்க தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர் ஜோன் ஃபைனர், அமெரிக்காவிடமும் இவை அதிகம் கையிருப்பில் இல்லை என்றார்.

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பில் முடிவெடுப்பது சிக்கலான பணி என்று அனைத்துலகப் பொருளியலுக்கான தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகர் தலீப் சிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்