டாக்கா: முஸ்லிம்களுக்குப் புனிதமான ரமலான் மாதத்தில் பங்ளாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், பொருள்களின் விலையை நிலைப்படுத்த உறுதி கூறியுள்ளார்.
அத்துடன், சட்டத்தை மீண்டும் நிலைநாட்டப்போவதாகவும் பொருளியல், உள்கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் தாரிக் இந்த வாக்குறுதிகளை அளித்துவருகிறார்.
60 வயதாகும் திரு தாரிக்கின் தந்தை, பங்ளாதேஷின் முன்னாள் அதிபர் ஸியாவுர் ரஹ்மான்; தாயார் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா.
அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது, ஆடை உற்பத்தித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது போன்ற முக்கியப் பொறுப்புகள் அவருக்குக் காத்திருக்கின்றன.
2024ல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து திரு தாரிக் வழிநடத்தும் புதிய நிர்வாகம் பல்வேறு அம்சங்களைச் சரிசெய்யவுள்ளது.
கறுப்புச் சந்தையில் பொருளை விற்று வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டாம் என திரு தாரிக், ரமலானின் தொடக்கத்தை முன்னிட்டு புதன்கிழமை (பிப்ரவரி 18) ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கூறினார்.
அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு போன்ற உணவு வகைகளின் தேவை கூடுவதால் ரமலான் மாதத்தில் அவற்றின் விலை அதிகரிப்பது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
“தனிமனிதத் தூய்மைக்கான மாதமாக ரமலான் திகழ்கிறது. இது பொதுமக்களின் வேதனையை அதிகரிப்பதற்கான நேரமன்று. அனைவர்க்கும் தேவைப்படும் பொருள்கள் தொடர்ந்து கட்டுப்படியாகும் விலையில் இருப்பதை நாம் உறுதிசெய்யவேண்டும்,” என்று திரு தாரிக் கூறினார்.
பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன. நாட்டின் வருடாந்தர பணவீக்கம் 8.58 விழுக்காடாக உள்ளது. மே 2025க்குப் பிறகு மிக அதிகமான பணவீக்க விகிதம் இது.
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளைத் தகர்த்து, ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதற்குத் தலையாய முக்கியத்துவம் தரப்படும் என்றும் திரு தாரிக் கூறினார்.

